ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவிரைவு (ஆர்டிஎஸ்) ரயில் திட்ட வேலைத்தளத்தில் நிகழ்ந்த விபத்தில் கட்டுமான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்; மற்றோர் ஊழியர் காயமடைந்தார்.
உட்லண்ட்ஸ் நார்த்தில் கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூன் 27) காலை 9.30 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
நிலையத்தின் அடித்தளத்திற்கு உலோகக் கம்பிகளைப் பொருத்தியபோது அந்தக் கம்பிகள் இரு ஊழியர்கள் மீது விழுந்தன.
காயமடைந்த அவ்விருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
48 வயது ஊழியர் பின்னர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது. காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வரும் ஊழியரின் வயது 49.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சதிச்செயல் நடைபெற்ற சந்தேகம் இல்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊழியர்கள் மீது விழுவதற்கு முன்னர் உலோகக் கம்பிகள் ஊசலாடியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பாதுகாப்பு அம்சங்களைக் கடுமையாகக் கருதுவதாகத் தெரிவித்த ஆணையம், பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்து மேலும் பலப்படுத்த காலக்கெடு கோரப்பட்டு உள்ளதாகவும் கூறியது.
இதற்கிடையே, இறந்தவரின் குடும்பத்திற்கு உதவி செய்வது தொடர்பாக கட்டுமானக் குத்தகையாளரான பென்டா ஓசன் கன்ஸ்ட்ரக்சன் என்னும் ஜப்பானிய நிறுவனத்துடனும் துணைக் குத்தகையாளரான இண்டர்னோ என்ஜினியரிங் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றி வருவதாக ஆணையம் குறிப்பிட்டது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் வேலைத்தளத்தில் கடந்த ஏழு மாதங்களில் நிகழ்ந்திருக்கும் மூன்றாவது மரணம் இது.
பாரங்களைத் தூக்கும்போது 3-3-3- என்னும் முறையைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று பதிவுபெற்ற வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரி ஹான் சென்கியி தெரிவித்தார்.
முதலாளிகள், பொறுப்பான ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இணைந்து அந்தப் பணியை நிறைவேற்றக் குறிக்கப்படும் 3-3-3 என்னும் முறையை தொழிற்கூடங்கள் அறிந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
உயரே தூக்கப்படும் பாரத்தில் இருந்து குறைந்தபட்சம் 3 அடி பாதுகாப்பு இடைவெளி இருக்க வேண்டும். முதலில் தரையில் இருந்து 30 சென்டிமீட்டர் உயரத்திற்குத் தூக்கி உறுதித்தன்மையைச் சோதிக்க வேண்டும். தேவைப்படும் உயரத்திற்கு அதனைத் தூக்குவதற்கு முன்னர் மூன்று வினாடிகள் காத்திருக்க வேண்டும்.
இதுதான் பாரத்தைத் தூக்குவதற்கான பாதுகாப்பு நடைமுறை என்று அவர் விளக்கினார்.
இடையில் நிறுத்தப்பட்ட பாரத்தைக் கையாளும்போது சுமுகமான, பாதுகாப்பான நடைமுறையை உறுதிசெய்ய தகவல் தொடர்பு ஒத்துழைப்பும் அவசியம் என்றார் திரு ஹான்.
உட்லண்ட்ஸ் நார்த்தில் அதிவிரைவு ரயில்நிலையத்தைக் கட்டி முடிக்க பென்டா ஓசன் கட்டுமான நிறுவனத்துக்கு 2020ஆம் ஆண்ட $932.8 மில்லியன் மதிப்புள்ள ஏலக்குத்தகையை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியது.
தற்போதைய தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் அமைந்துள்ள உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்தின் அருகே அந்தக் கட்டுமானப் பகுதி அமைந்துள்ளது.

