மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் உயர்வு

2 mins read
75aad248-94aa-40d2-8803-a99f1b4e399a
புதிய மின்சாரக் கட்டணம் இவ்வாண்டின் முதல் காலாண்டைக் காட்டிலும் 1 காசு குறைவாக இருக்கும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் உயர உள்ளன.

ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான மூன்று மாத காலத்திற்கு மின்சாரக் கட்டணங்கள் இதற்கு முந்திய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.3 விழுக்காடு உயரும் என்று மின் உற்பத்தி நிறுவனமான எஸ்பி குழுமம் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தெரிவித்தது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரக் கட்டணத்தில் தற்போது கிலோவாட்-மணி ஒவ்வொன்றுக்கும் 29.79 காசுகள் என்று இருப்பது ஜூலை முதல் 29.88 காசுக்கு உயரும். இருப்பினும், இவ்வாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 1 காசு குறைவு. இந்தக் கட்டணங்கள் அனைத்தும் ஜிஎஸ்டிக்கு முந்தியவை.

புதிய கட்டணத்துடன் கணக்கிடுகையில், நான்கறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் சராசரி மாதாந்திர மின் கட்டணத்தில் 35 காசு உயர்வு இருக்கும்.

அதாவது $118.03 என்னும் சராசரிக் கட்டணம் இனி $118.38 ஆக இருக்கும். ஜிஎஸ்டி கணக்கிடப்படாத கட்டணங்கள் இவை.

எரிசக்திச் செலவுகளில் கிலோவாட் மணிக்கு 0.09 காசு அதிகரித்ததன் விளைவாக இந்தக் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டதாக எஸ்பி குழுமம் கூறியது.

இதற்கிடையே, குழாய் வழியாக விநியோகிக்கப்படும் எரிவாயுவின் விலை கிலோவாட் மணிக்கு 0.3 காசு உயரும் என்று எரிவாயு உற்பத்தியாளரும் சில்லறை விற்பனையாளருமான சிட்டி எனெர்ஜி அறிவித்து உள்ளது.

எரிவாயு உற்பத்தி தொடர்பான செலவுகள் அதிகரித்ததன் விளைவாக இந்தக் கட்டணம் உயருவதாக அது தெரிவித்தது.

குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு கிலோவாட் மணிக்கு 23.12 காசு என்பது இனி 23.42 காசாக உயரும். ஜிஎஸ்டியைச் சேர்த்துக் கணக்கிட்டால் புதிய கட்டணம் 25.53 காசுகளாக இருக்கும்.

எரிவாயுக் கட்டண உயர்வுக்கு எரிசக்திச் சந்தை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்