கட்டுமான ஊழியர்மீது மோதிய பேருந்து; ஓட்டுநர் பணியிடை நீக்கம்

கட்டுமான ஊழியர்மீது மோதிய பேருந்து; ஓட்டுநர் பணியிடை நீக்கம்

2 mins read
2e810fbe-528b-4f73-9982-ee55e599c431
இந்த விபத்துக் குறித்துக் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் வியாழக்கிழமை மாலை 5.25 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. - படம்: எஸ்ஜி ரோடு விஜிலெண்ட்/ஃபேஸ்புக்

ஆன்சன் ரோடு சாலைச் சந்திப்பின் இடதுபுறப் பாதையில் கட்டுமான ஊழியர் ஒருவர் போக்குவரத்துக் கூம்புகளை வைத்துக்கொண்டிருந்தபோது எஸ்எம்ஆர்டி பேருந்து சேவை எண் 970 அவர்மீது மோதியது.

இந்த விபத்து வியாழக்கிழமையன்று (ஜூன் 27) மாலை 5.20 மணியளவில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்துக் குறித்துக் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் வியாழக்கிழமை மாலை 5.25 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சேவை எண் 970 கொண்ட எஸ்எம்ஆர்டி பேருந்து, சாலைச் சந்திப்பில் வலதுபுறமாகத் திரும்புவதையும் கட்டுமான ஊழியர் ஒருவர் போக்குவரத்துக் கூம்பு ஒன்றை அந்தச் சந்திப்பில் இருக்கும் இடதுபுறப் பாதையில் வைப்பதையும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் காண முடிந்தது.

மேலும், பேருந்து தன்னை நெருங்கி வருவதை அறிந்த ஊழியர் தனது பின்புறத்தை பேருந்தை நோக்கி திருப்புவதும் பின்னர் பேருந்து அவர்மீது மோதியதால் அவர் கீழே விழுவதையும் அந்தக் காணொளியில் பார்க்க முடிந்தது.

அந்த 33 வயது கட்டுமான ஊழியரின் கால்மீது பேருந்தின் ஒரு சக்கரமாவது ஏறி இறங்கி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

அந்தப் பேருந்தை ஓட்டிவந்த 48 வயதான ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக எஸ்எம் ஆர்டி பேருந்துகளுக்கான துணை நிர்வாக இயக்குநர் வின்சென்ட் கே தெரிவித்தார்.

அந்தப் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை எனவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கட்டுமான ஊழியருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதற்காக எஸ்எம் ஆர்டி குழு அவரைத் தொடர்புகொண்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

“காவல்துறையினரின் விசாரணைக்கு நாங்கள் உதவி வருகிறோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்