தமது மகனை அடித்ததால் கோபமடைந்த தந்தை, உடன் படித்த ஆறு வயது சிறுவனின் முகத்தில் குத்தியிருக்கிறார்.
வழக்கு விசாரணையின்போது பேசிய அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் இயூஜின் புவா, முகத்தில் குத்தப்பட்டதால் சிறுவன் பின்பக்கமாக விழுந்தார் என்றார்.
“நல்ல வேளையாக பாட்டி கையைப் பிடித்திருந்ததால் சிறுவன் தரையில் விழுந்து தலையில் அடிபடவில்லை,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பெயரை வெளியிட அனுமதியில்லை. பின்னர் புக்கிட் பாத்தோக் பலதுறை மருந்தகத்திற்குச் சென்ற சிறுவனுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. வெளியில் தெரியுமளவுக்கு அவனுக்கு காயம் ஏற்படவில்லை.
ஜூன் 28ஆம் தேதி விசாரணையில் சிறுவனைத் தாக்கிய 53 வயது நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் $440.65 மருத்துவச் செலவுகளை அவர் ஏற்றுக் கொண்டார். சிறுவனும் அவரது மகனும் அடையாளம் தெரிந்து அவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக குற்றம் செய்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
குற்றச்செயல் நடந்தபோது இரு சிறுவர்களும் செறிவூட்டல் நிலையத்தில் படித்துக் கொண்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சிறுவனைத் தாக்கிய நபருக்கு ஜூலை 18ஆம் தேதி தண்டனை விதிக்கப்படவிருக்கிறது.
பதினான்கு வயதுக்குட்பட்ட சிறுவனைத் தாக்கினால் அதற்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் $10,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

