தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணெய்க் கசிவுச் சம்பவம்: இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணிகள் தொடக்கம்

2 mins read
6fd9b5ab-ca98-41d7-a00c-67bf57b9d29a
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நடைபெறும் துப்புரவுப் பணிகள். - படம்: சுந்தர நடராஜ்

பாசிர் பாஞ்சாங் முனைய எண்ணெய்க் கசிவுச் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணிகளின் முதற்கட்டம் முடிவடைந்து இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

இதில் சுத்தம்செய்யக் கடினமான பகுதிகளான பாறை இடுக்குகள், கரையோர சுவர்களின் மூலைகள் ஆகியவற்றில் படிந்துள்ள எண்ணெய்த் திட்டுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பயிற்சிபெற்ற ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு உரிய கருவிகளின் உதவியுடன் இப்பணிகளை மேற்கொள்கின்றனர்.

இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைய மூன்று மாதக் காலம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை, அலைகள், காற்றுத் திசை, வேகம் ஆகியவற்றைப் பொறுத்து இந்தக் கால அளவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுப்புற வாரியம் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா பகுதியில் படிந்துள்ள எண்ணெய்ப் படலங்களை ஆராய்ந்து அதற்குரிய துப்புரவுத் திட்டங்களை வகுத்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா துப்புரவுத் திட்டச் செயல்பாடு

கடற்துறையில் எண்ணெய்க் கசிவுகளுக்கென பயன்படுத்தப்படும் படகுகள் மூலம், கடல் நீர் மோட்டார் உதவியுடன் அதிவேகமாகப் பீச்சியடிக்கப்பட்டு எண்ணெய்ப் படலங்கள் அகற்றப்படுகின்றன. ஆங்காங்கு படிந்திருக்கும் எண்ணெய்ப் படலங்களுக்கேற்ப நீரின் வேகமும் மாற்றியமைக்கப்படுகிறது.

அலைகளைச் செயற்கையாக அதிகப்படுத்தி, அவற்றின் மூலம் சுவரிலிருந்து கடல் நீரில் கலக்கும் படிமங்களைக் கரையோரங்களில் சேர்க்க வழி செய்யப்படுகிறது.

கரையோரங்களில் வந்து சேரும் எண்ணெய், உறிஞ்சு மிதவைகள் மூலம் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. சுவற்றில் உள்ள எண்ணெய்ப் படலங்களை அகற்றுவதன் மூலம், அலைகள் சுவற்றில் மோதி, அந்த எண்ணெய் மீண்டும் கடலில் சேருவது தடுக்கப்படும்.

இப்பணிகள் பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் நடந்தாலும், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய திட்டங்கள் வகுக்கப்படுவதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் பேச்சளார் தெரிவித்தார்.

எண்ணெய்ப் படிமங்கள் கடலின் பிற பகுதிகளுக்குப் பரவாமல் இருக்கும் வண்ணம் பாதிக்கப்பட்ட இடங்கள் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கவனமாகச் சுத்தம் செய்யப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.

இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணிகள் நிறைவடைந்தவுடன், அப்பகுதிகள் சோதனை செய்யப்பட்டு, அடுத்த கட்டப் பணிகள் திட்டமிடப்படும் என்றும் அவர் சொன்னார்.

அப்பகுதிகளில் அவ்வப்போது காற்று, நீரின் தரம் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், பணிகள் முடிவடைந்து நீரின் தரம் மீண்டும் பரிசோதிக்கப்பட்ட பின் அவை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கட்டம் கட்டமாகத் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 14ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் முனையத்தில் 400 மெட்ரிக் டன் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.

அலை நீரோட்டத்தால் செந்தோசா, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, லெப்ரடோர் வனப்பகுதி, தென் தீவுகள், மரினா சவுத் படகுத்துறை ஆகிய பகுதிகளை எண்ணெய்க் கசிவு சென்றடைந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், தேசியப் பூங்காக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம், செந்தோசா மேம்பாட்டு நிறுவனம், சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவை துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்