ஜோகூர் பாரு: சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் பகுதிக்கும் ஜோகூருக்கும் இடையே உள்ள கடற்பாலம் கட்டப்பட்டு ஜூன் 28ஆம் தேதியுடன் 100 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும் இருதரப்பு குடிநுழைவு, சோதனைச்சாவடித் துறைகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்திற்கு ஜோகூரின் சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடியின் நிர்வாகம் கேக் தந்து சிறப்பித்துள்ளது.
அந்தக் கேக்கை சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடிக் குடிநுழைவுப் பிரிவின் துணைத் தலைவர் ஆர். விமலா, நேரில் சென்று சிங்கப்பூர் தரப்பினரிடம் தந்தார்.
‘கடந்த நூறு ஆண்டுகளில் வலுவான உறவு’ என்ற வாசகத்துடனும் சிங்கப்பூரையும் ஜோகூரையும் இணைக்கும் கடற்பாலத்தின் படத்தையும் கொண்ட அந்த கேக்கை சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டது.
“இருநாடுகளுக்கு இடையிலான மிக நெருக்கமான ஒத்துழைப்பு தொடர வேண்டும் என விரும்புகிறோம்,” என்று சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடி அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

