தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தின் முதல் தூதர் நியமனம்

2 mins read
6d3cf864-0abe-42c7-b2c6-776280d319ae
சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தில் முதல் தூதர் திரு சைமன் குங். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கம் அதன் முதல் தூதரை நியமித்துள்ளது.

37 வயது திரு சைமன் குங் சங்கத்தின் முதல் தூதராவார்.

அவர் முன்பு போதைப்பொருளுக்கு அடிமையாகி, மூன்று ஆண்டுகளுக்கு மறுவாழ்வு நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

அக்காலகட்டத்தில் அவரது நான்கு வயது மகள் இறந்தார்.

அச்சிறுமியைத் திரு குங்கின் மனைவி கொன்றதாகக் கூறப்படுகிறது.

திரு குங்கின் மனைவி மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தமது ஆதரவும் உதவியும் தமது மகளுக்குத் தேவைப்பட்டதாலும் ஆனால் தாம் அப்போது அங்கு அவருடன் இருக்கவில்லை என்பதாலும் பல ஆண்டுகளாகியும் திரு குங்கின் மனக் காயங்கள் ஆறவில்லை.

கடந்த சில ஆண்டுகளில் போதைப்பொருள் பழக்கம் காரணமாக திரு குங்கிற்குச் சட்டரீதியாகப் பலமுறை சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் அவர் மறுவாழ்வு நிலையத்தில் இருந்தபோது இனி ஒருபோதும் போதைப்பொருள் உட்கொள்ளப்போவதில்லை என்று உறுதி பூண்டார்.

தற்போது அவர் ஒரு வர்த்தகராகவும் உள்ளடக்கப் படைப்பாளராகவும் இருக்கிறார்.

போதைப் புழங்கியாக இருந்து 20 ஆண்டுகள் கழித்து அதிலிருந்து மீண்டு வந்த அனுபவம் அவருக்கு உண்டு.

இதைப் பயன்படுத்தி மற்ற போதைப் புழங்கிகளுக்கு உதவ அவர் முற்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தின் முதல் தூதராக அவர் நியமிக்கப்படுவது குறித்து ஜூன் 28ஆம் தேதியன்று நடைபெற்ற அறப்பணி இரவு விருந்தில் அறிவிக்கப்பட்டது.

சங்கத்தின் தூதர் என்கிற முறையில், திரு குங் பள்ளிகளில் போதைப்பொருளுக்கு எதிராக உரையாற்றுவதுடன் போதைப்பொருளுக்கு அடிமையாகும் அபாயத்தை எதிர்நோக்கும் இளையர்களுக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் சேவையாற்றுவார்.

இதுபோன்று அவர் மக்களிடையே போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்க பல நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

சங்கத்தின் அறப்பணி இரவு விருந்தில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

போதைப்பொருளுக்கு எதிராகச் சங்கம் மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகளை அவர் வெகுவாகப் பாராட்டினார். போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாப்பதில் சங்கம் முக்கிய பங்காளியாக இருப்பதாக அதிபர் தர்மன் கூறினார்.

போதைப்பொருளுக்கு எதிரான போரில் சிங்கப்பூர் பல வெற்றிகளைச் சுவைத்திருக்கும்போதிலும் போதைப்பொருள் பிரச்சினையை முறியடிப்பதில் நாடு எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்ந்து மிகக் கடுமையானதாக இருப்பதை அவர் சுட்டினார்.

போதைப்பொருள் புழக்கத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அனைவரின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என அதிபர் தர்மன் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் அறவே இல்லாத நாடாக சிங்கப்பூர் திகழ, சட்ட அமலாக்கம் அவசியம் என்று தெரிவித்த அதிபர் தர்மன், இளையர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகாதபடி பெற்றோரும் ஆசிரியர்களும் உதவலாம் என்று கூறினார்.

போதைப் புழங்கிகள் அப்பழக்கத்திலிருந்து மீண்டு வர குடும்ப உறுப்பினர்கள், சமூகத் தொண்டூழியர்கள், ஆலோசகர்கள், முதலாளிகள் ஆகியோரின் ஆதரவும் தேவை என்றார் அவர்.

“முன்னாள் போதைப் புழங்கிகள் மீதான அவப்பெயரைக் களையவும் சங்கத்துடன் இணைந்து செயல்படுவும் தேவையான ஆற்றலைக் கொண்டிருப்பவராகவும் சங்கத்தின் முதல் தூதரான திரு குங் இருக்கிறார். அவர் நல்ல முன்னுதாரணமாக உள்ளார்,” என்று அதிபர் தர்மன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்