இரண்டாம் உலகப் போரின்போது வெடிக்காத ஆயுதம், அங் மோ கியோவில் இருக்கும் கட்டுமானத் தளம் ஒன்றிலிருந்து வெள்ளிக்கிழமையன்று (28 ஜூன்) அகற்றப்பட்டது.
தெக் கீ பெருவிரைவு ரயில் நிலையம் அமையவிருக்கும் பகுதியில் அந்த ஆயுதம் காணப்பட்டது. மேரிமவுன்ட் ரோட்டை நோக்கிச் செல்லும் அங் மோ கியோ அவ்வென்யூ 1ல் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது அந்த ஆயுதம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் அதுகுறித்துத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. அந்த ஆயுதம், இரண்டாம் உலகப் போரில் வெடிக்காமல் இருந்தது என்பதை உறுதிசெய்ய சிங்கப்பூர் ஆயுதப் படையின், வெடிக்கக்கூடிய ஆயுதங்களைச் செயலிழக்கச் செய்யும் பிரிவுடன் இணைந்து செயல்பட்டதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.
“அதைக் கையாள்வதில் ஆபத்து ஏதும் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. ஆயுதத்தை அப்புறப்படுத்துவதற்காக அது அகற்றப்பட்டது. பொதுமக்களுக்கு எந்த அபாயமும் ஏற்படவில்லை,” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், மைஸ்ட் கூட்டுரிமை வீட்டு கட்டுமானத் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட 100 கிலோகிராம் எடைகொண்ட இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கவைக்கப்பட்டது. ஆகாயத்திலிருந்து வீசுவதற்கான அந்த வெடிகுண்டை அகற்றுவது பாதுகாப்பாக இருக்காது என்று வல்லுநர்கள் தீர்மானித்த பிறகு அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதை முன்னிட்டு அப்பர் புக்கிட் தீமா வட்டாரத்தில் வசித்த அல்லது வேலை செய்த ஆயிரக்கணக்கானோர் தாங்கள் இருந்த கட்டடங்களிலிருந்து பல மணிநேரம் வெளியேற வேண்டியிருந்தது.

