சிங்கப்பூரின் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழின் 100ஆவது பதிப்பு, ஜூன் 30ஆம் தேதி வெளியீடு கண்டது.
இப்பதிப்பை ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழ் நிறுவனர் எம் ஏ முஸ்தபா வெளியிட, முனைவர் வீரமணி பெற்றுக்கொண்டார்.
உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடந்த இந்நிகழ்வில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சமஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதழின் ஆசிரியர் ஷாநவாஸ், தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ப் பிரிவுத் தலைவர் அழகிய பாண்டியன், இவ்விதழுக்குப் பங்களிக்கும் எழுத்தாளர்கள், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் வாசகர் வட்டத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இதழ், சிங்கப்பூர் எழுத்தாளர்களின் சிறுகதைகள், தொடர்கதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
சிங்கப்பூர்த் தமிழ் சமூகத்தில் சாதனை படைப்போர்க்கு அங்கீகாரம் அளித்தல், இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தல், நவீன தொழில்நுட்பங்கள் குறித்த தமிழ்க் கட்டுரைகளை வெளியிடுதல் எனப் பல்வேறு பணிகளை இதழ் மேற்கொண்டு வருகிறது.
சிங்கப்பூரில் இதழியல் சந்திக்கும் சவால்கள் குறித்தும் அவற்றைக் கடந்து வெற்றி பெறும் வழிகள் குறித்தும் கலந்துரையாடல் ஒன்று நிகழ்வில் இடம்பெற்றது.
எழுத்தாளர் மஹேஷ் குமார் நெறியாள்கை செய்த இக்கலந்துரையாடலில், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத் தலைவர் அருண் மகிழ்நன், முத்து நெடுமாறன், எழுத்தாளரும் தமிழ் முரசு இணை ஆசிரியருமான கனகலதா ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ் மக்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள கலாசாரத்தில் ஒன்றிணைந்து, அங்குள்ள அழகியல், சவால்கள், சாதனைகளைக் குறித்து பேசவும் எழுதவும் வேண்டும் என்று பேசிய எழுத்தாளர் சமஸ், சிங்கப்பூர்த் தமிழர்களிடம் அதிகம் தென்படும் அப்பண்பைக் கண்டு வியப்பதாகச் சொன்னார். தொடர்ந்து, பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
மாணவர்களின் பாடல், நடன அங்கங்களுடன் இவ்விதழ் கடந்து வந்த பாதை, சந்தித்த சவால்கள், அனுபவங்கள், வாழ்த்துகள் எனப் பலவற்றையும் அழைப்பாளர்கள் பகிர்ந்தனர்.