பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளராக பிரீத்தம் சிங்கும் தலைவராக திருவாட்டி சில்வியா லிம்மும் தொடர்ந்து அப்பதவிகளில் நீடிப்பர்.
ஜூன் 30ஆம் தேதியன்று கட்சி மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன்மூலம் திரு சிங்கும் திருவாட்டி லிம்மும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சிக்குத் தலைமை தாங்குவர்.
பாட்டாளிக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்போர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் அக்கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளரான 68 வயது லோ தியா கியாங்கும் மத்திய நிர்வாகக் குழுவில் இடம்பெறுகிறார்.
அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான 49 வயது ஃபைசால் மனாப், 47 வயது ஜெரல்ட் கியாம்; செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான 41 வயது ஹெ டிங் ரு, 47 வயது லுயிஸ் சுவா, 48 வயது ஜேமஸ் லிம்; ஹவ்காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான 54 வயது டெனிஸ் டான் ஆகியோர் மத்திய நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
கட்சித் தலைவர் பதவிக்காக 59 வயது திருவாட்டி லிம்மை நீண்டகாலமாக பாட்டாளிக் கட்சி உறுப்பினராக இருந்து வரும் டான் பின் செங் எதிர்த்துப் போட்டியிட்டதாக பாட்டாளிக் கட்சி தெரிவித்தது. ஆயினும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று திருவாட்டி லிம் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார்.
2003ஆம் ஆண்டிலிருந்து அவர் பாட்டாளிக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
48 வயது திரு சிங், போட்டியின்றி கட்சியின் தலைமைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னாள் பொங்கோல் ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரான 46 வயது திருவாட்டி லீ லி லியன் பாட்டாளிக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அக்குழுவிலிருந்து அவர் 2020ஆம் ஆண்டில் விலகினார்.
பொதுத் தேர்தலில் முன்பு போட்டியிட்ட 41 வயது நெதேனியல் கோ, 47 வயது கென்னத் ஃபூ ஆகியோர் மத்திய நிர்வாகக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
அவர்களுடன் 47 வயது டான் கோங் சூனும் வழக்கறிஞரான 42 வயது ஆங் பூன் யாவ்வும் அக்குழுவில் இணைகின்றனர்.
திரு ஆங், தொண்டூழியராகப் பாட்டாளிக் கட்சியில் 2012ஆம் ஆண்டில் சேர்ந்தார்.
மத்திய நிர்வாகக் குழுவில் மொத்தம் 14 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பாட்டாளிக் கட்சி மாநாட்டில் 80 கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
கட்சித் தேர்தல் ஜூன் 30ஆம் தேதியன்று கிளார்க் கீ வட்டாரத்தில் நடைபெற்றது.
கட்சித் தேர்தலின் முடிவுகள் குறித்து திரு சிங் மகிழ்ச்சி தெரிவித்தார்.

