சிங்கப்பூரில் இயங்கிவரும் பணம் அனுப்பும் சேவைகள் பயங்கரவாத நிதியளிப்பு தொடர்பான அதிக அபாயத்தை எதிர்நோக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, எல்லைதாண்டிய பணம் அனுப்பும் சேவைகளும் உரிமம் பெறாத பணம் அனுப்பும் சேவைகளும் அந்த அபாயத்தில் சிக்கக்கூடும்.
‘பயங்கரவாத நிதியளிப்பு தேசிய அபாய மதிப்பீடு’ என்னும் அறிக்கை இதனைத் தெரிவிக்கிறது. அந்த அறிக்கையை நிதி மற்றும் உள்துறை அமைச்சுகளும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் இணைந்து திங்கட்கிழமை (ஜூலை 1) வெளியிட்டன.
இதற்கு முன்னர் இப்படி ஓர் அறிக்கை 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
எல்லை தாண்டிய பணம் அனுப்பும் விரைவுச் சேவைகளும் இணையம் வழியாக நடத்தப்படும் நிதித் திரட்டுகளும் புதிய அபாயங்களாக அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.
எல்லை தாண்டிய பணம் அனுப்பும் விரைவுச் சேவைகள் வங்கிச் செயலி, கியூஆர் குறியீடு ஆகியன உள்ளிட்டவை மூலம் நடைபெறுகிறது.
சிங்கப்பூரின் அதிக இணையப் பயன்பாடு, பரவலான இணைய வங்கி பயன்பாடு, கொவிட்-19 பெருந்தொற்றால் பிரபலமடைந்த மின்னிலக்கப் பொருளியலை உலகம் அமல்படுத்தும் வேகம் ஆகியன காரணமாக இதுபோன்ற பணம் அனுப்பும் சேவைகளைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக அமைச்சுகளும் ஆணையமும் தெரிவித்துள்ளன.
“சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையால் பணம் அனுப்பும் சேவைகள் அதிகம் நடைபெறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“அத்தகைய ஊழியர்கள் வங்கிகளுடன் ஒப்பிட்டு, செலவு குறைந்த வேகம் நிறைந்த சேவைகளை வழங்கும் பணம் அனுப்புநர்களை நாடுகிறார்கள்,” என்று அந்த அமைப்புகள் குறிப்பிட்டு உள்ளன.
இருப்பினும், உள்ளூர் பணம் அனுப்பும் சேவை முகவர்கள் அடிக்கடி பரிவர்த்தனை மேற்கொள்ளும் இந்த வட்டார நாடுகளில் சில பயங்கரவாதத்துக்கும் பயங்கரவாத நிதியளிப்புக்கும் ஆளாகும் அதிக அபாயம் இருப்பதாகவும் அவை சுட்டின.
கடந்த 2020ஆம் ஆண்டு பயங்கரவாத நிதியளிப்புக் குற்றத்திற்காக 36 வயது சிங்கப்பூரர் ஒருவருக்கு ஈராண்டு, ஒன்பது மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
துருக்கியில் ஐஎஸ்ஐஎஸ் போராளிக் குழுவுடன் தொடர்புடைய ஆடவர் ஒருவருக்கு வெஸ்டர்ன் யூனியன் பணம் அனுப்பும் நிறுவனம் மூலம் $450 அனுப்பிய குற்றத்திற்காக அவருக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
இணையம் வாயிலாக நடைபெறும் வெளிநாட்டு நிதித் திரட்டு இயக்கங்கள் தொடர்பாகவும் அறிக்கை கவலை தெரிவித்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு 27 வயது பங்ளாதேஷ் கட்டுமான ஊழியர் ஒருவர் சிரியாவைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு வெவ்வேறு இணையத்தளங்கள் வாயிலாக $900 நன்கொடை அளித்த குற்றம் புரிந்தார்.
2022ஆம் ஆண்டு அவருக்கு ஈராண்டு, எட்டு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பயங்கரவாத நிதியளிப்பு தொடர்பில் அவர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் அப்போது சுமத்தப்பட்டன.

