சிங்கப்பூரர்களை கவரக்கூடியது நமது பொதுச் சேவை: அமைச்சர் சான்

2 mins read
4f6d4da9-3fe9-4ca9-a668-27538990ebf5
‘பொதுச் சேவை ஊழியர் ஆக விரும்புவோர் யார்?’ என்னும் தலைப்பில் நடைபெற்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வலையொலியில் பங்கேற்ற அமைச்சர் சான் சுன் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் வருங்காலத்திற்காக பொதுச் சேவை வழங்கும் வாய்ப்புக்கான தேவை இன்னும் நீடிப்பதாக பொதுச் சேவைத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து உள்ளார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் வலையொலிக்கு ஜூன் 28 ஆம் தேதி திரு சான் நேர்காணல் வழங்கினார்.

அப்போது அவர் குறிப்பிடுகையில், “தொழில்நுட்ப மாற்றங்களால் தனியார் துறை வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ள வேளையில், அரசாங்கம் அதன் 152,000 அதிகாரிகளுக்கு மீண்டும் பயிற்சி அளித்து பணியமர்த்தக் கடப்பாடு கொண்டுள்ளது,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “வெளிநாட்டில் உள்ள எனது சகாக்களுடன் ஒப்பிடுகையில் நான் பாக்கியம் செய்தவன் என்றுதான் சொல்ல வேண்டும்.

“காரணம், சிங்கப்பூரின் பொதுச் சேவை என்பது இன்றளவிலும் நமது தேசத்தின் பெருமைக்குரியதாகவும் மக்கள் விரும்பிச் சேரும் சேவையாகவும் இருக்கிறது.

“இன்றைய உலகம் போட்டியாளர்களால் மாறிக் கிடக்கிறது. சிங்கப்பூரர்களில் அதிகமானோர் வெவ்வேறு கண்ணோட்டங்களையும் விருப்பங்களையும் கொண்டுள்ளனர்.

“இப்படிப்பட்ட நிலையில், உள்ளூர் பொதுச் சேவை ஊழியர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

“நாட்டிற்கு அப்பால் உள்ள புவிசார் அரசியல் முன்னேற்றங்களை நோக்கி அத்தகைய ஊழியர்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதும் சிங்கப்பூருக்கு நன்மை பயக்கும் வகையில் வேறுபட்டவர்களை ஒன்றிணைக்கும் திறனை அவர்கள் பெற்றிருப்பதும் அதற்கு எடுத்துக்காட்டுகள்.

“சிங்கப்பூர் செழிப்புடன் நிலைத்திருக்க அனுமதிக்கும் கட்டமைப்பை உருவாக்கவும் ஒன்றாகப் பணியாற்றவும் ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டறிய விருப்பமுள்ள அணியை ஒருசேரத் திரட்டுவது எவ்வாறு என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

“அத்தகைய பங்காளிகள் தனிப்பட்டவர்களாகவோ நாடுகளாகவோ அல்லது நிறுவனங்களாகவோகூட இருக்கலாம்,” என்று விளக்கினார் திரு சான்.

குறிப்புச் சொற்கள்