சிங்கப்பூரில் 33 வயது ஜஸ்பீர் சிங்கை ஆற்றில் தள்ளிவிட்டதாக நம்பப்படும் இந்திய நாட்டவரான 21 வயது லேகா பவன்மீது செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 2) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
பின்னோக்கியபடி ஆற்றில் தடுமாறி விழுந்த ஜஸ்பீர் சிங், தலையில் அடிபட்டு ஆற்றில் மூழ்கி மாண்டார்.
கண்மூடித்தனமாக செயல்பட்டு ஒருவருக்கு மரணம் விளைவித்ததாக லேகாமீது குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் ஜூன் 30ஆம் தேதி இரவு 10.15 மணியளவில் கிளார்க் கீ பேரங்காடிக்கு அருகே நடந்ததாகக் கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்தச் சம்பவம் குறித்துத் தங்களுக்கு ஜூன் 30ஆம் தேதி தகவல் கிடைத்தது எனக் காவல்துறை ஜூலை 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஆற்றில் தள்ளிவிடப்பட்ட ஜஸ்பீர் சிங்கை சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழுவினர் சடலமாகக் கண்டெடுத்தனர்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லேகாவை ஜூலை 1ஆம் தேதி கைது செய்தனர்.
அவர் மத்திய காவல் பிரிவு அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
லேகா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், கண்மூடித்தனமாகச் செயல்பட்டு ஒருவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.