சிங்கப்பூரர்கள் அனைவரும் அவரவர் பாதையில் வெற்றியைத் தேடிச் செல்ல கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
சிதறுண்டு கிடக்கும் புவிசார் அரசியல் சூழல், அதிவேக தொழில்நுட்ப மாற்றம் ஆகியவை நிலவும் உலகில், இளையர்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி, சரிசெய்து கொள்வதற்கு வகுக்கப்பட்டுள்ள மூன்று உத்திகளில் இதுவும் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.
பிரதமராக திரு வோங் மே மாதம் பதவியேற்ற பின்னர் முதன்முதலாக பங்குபெற்ற கலந்துரையாடலில் பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த ஏறத்தாழ 900 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடல் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. அந்தப் பல்கலைக்கழகம், கொள்கை ஆய்வுக் கழகம் மற்றும் ‘ வார்சிட்டி வாய்ஸ்’ என்ற மாணவர் அமைப்புடன் சேர்ந்து அதனை நடத்தியது.
இப்போதைய இளையர்களுக்கு முந்தைய தலைமுறையினரைவிட அதிக வாய்ப்புகளும் மேலும் அதிகமான வேலைத்தெரிவுகளும் வாழ்க்கைத்தொழில் வழிகளும் உள்ளன என்பதை திரு வோங் நினைவுகூர்ந்தார்.
மக்களிடையே மனப்போக்கு மாறி வருகிறது. இதில் அதிகமானோர் பாரம்பரிய வாழ்க்கைத் தொழிலுக்கு அப்பாற்பட்ட பாதையைத் தேர்வு செய்கின்றனர் என்று அவர் கூறினார்.
இதை எதிர்கொள்ள மாணவர்கள் தங்கள் திறன்களை முன்னெடுத்துச் சென்று, அவற்றில் தங்கள் முழு ஆற்றலை எட்டிப் பிடிக்க பிடிக்க வேண்டும் என்றார்.
“இடையிடையே, பின்னடைவுகளும் எதிர்ப்புகளும் ஏற்படலாம். ஆனால், கடுமையான உழைப்பும் அதில் உன்னதநிலையும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதுடன் அவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிட்டவும் வழிவகுக்கும்,” என்று அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
அதனை அடையும் நோக்கில், அரசாங்கம் சிங்கப்பூரர்களுக்கு மேலும் ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய திரு வோங், “ இதனால்தான் அரசாங்கம் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தில் கணிசமாக முதலீடு செய்து வருகிறது.” என்று விளக்கினார்.
பிரதமர் தமது மாணவப் பருவத்தை நினைவுகூர்ந்தார். அப்பொழுது இளையருக்கு இருந்த வாய்ப்புகள் மிகவும் வித்தியாசமானவை என்று கூறிய பிரதமர், “என் காலத்து மாணவர்களில் 55 விழுக்காட்டினரே உயர்நிலைப் பள்ளியைத் தாண்டிய கல்விக்கு செல்ல முடிந்தது,” என்றார்.
“உலகின் முக்கிய வல்லரசுகளிடையே போட்டி அதிகரித்துள்ளது, குறிப்பாக அமெரிக்கா, சீனாவுக்கு இடையே. அத்துடன் உலகம் புதிய தொழில்நுட்ப முன்னேற்ற அலையின் விளிம்பில் உள்ளது,” என்று அவர் சொன்னார்.
இதில், சிங்கப்பூரர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைப் பாதையில் அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுடன் சமுதாயக் கட்டிறுக்கத்தைப் புதுப்பிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக திரு வோங் தெரிவித்தார்.