வழக்கு செலவினங்களுக்காக உணவக உரிமையாளர் வயிலட் ஊன்னுக்கும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் $299,000 செலுத்த வேண்டும் என்று சொகுசு, வாழ்வியல் நிறுவனமான குரூப் எம்எம்எம் நிறுவனத்துக்கும் அதன் இயக்குநர் மனோஜ் முர்ஜானிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, ஊன் குடும்பத்துக்கு முர்ஜானியும் குரூப் எம்எம்எம் நிறுவனமும் $63,889.95 கட்டணமும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் முர்ஜானிக்கு எதிரான சிவில் வழக்கு ஊன் குடும்பத்துக்குச் சாதகமாக முடிந்ததை அடுத்து, இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வயிலட் ஊன் இன்கார்ப்பரேட் நிறுவனத்தில் 50 விழுக்காடு பங்குகளை முர்ஜானி வைத்திருக்கிறார்.
அதை அவரிடமிருந்து சந்தை விலையில் ஊன் குடும்பம் வாங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஊன் குடும்பம் முர்ஜானி மற்றும் குரூப் எம்எம்எம் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட முடியாதபடி முர்ஜானியும் குரூப் எம்எம்எம் நிறுவனமும் நடந்துகொண்டதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
ஊனிடமிமும் அவரது பிள்ளைகளிடமும் நியாயமற்ற வகையில் நடந்துகொண்ட முர்ஜானியும் குரூப் எம்எம்எம் நிறுவனமும் அதன்மூலம் பலனடையக்கூடாது என்று உயர் நீதிமன்றம் கூறியது.


