கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ஜூலை 4ஆம் தேதி காலை, கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு சேவை இடையூறு ஏற்பட்டது.
ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்தில் தண்டவாளம் பழுதடைந்ததால் இந்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தண்டவாளம் பழுதடைந்திருப்பது தெரிய வந்ததும் பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில்கள் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாகச் சென்றதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூறியது.
எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் தண்டவாளம் பழுதடைந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பழுதுபார்ப்புப் பணிகளுக்குப் பிறகு கிளமெண்டி எம்ஆர்டி நிலையத்துக்கும் பூன் லே எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையே பயணிகளுக்கான இலவச பேருந்துச் சேவை ஏற்பாடு நிறுத்தப்பட்டது.
அதிகாலை 5 மணி அளவில் தண்டவாளம் பழுதடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காலை 7.25 மணிக்கு எஸ்எம்ஆர்டி தகவல் வெளியிட்டது.
பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் ரயில் சேவை படிப்படியாக வழக்கநிலை திரும்புவதாகவும் அது காலை 8.10 மணிக்கு அறிவித்தது.

