தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகரிக்கும் விலைவாசியைச் சமாளிக்க 1.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ரொக்க வழங்கீடு

2 mins read
14e4ccae-811f-4776-8b24-e4b84a842d07
அதிகபட்சம் $21,000 வருடாந்திர மதிப்பு கொண்ட வீடுகளில் வசிப்போருக்கு $850 கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. $21,000க்கும் அதிகமான, $25,000 வரையிலான வருடாந்திர மதிப்பு கொண்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு $450 வழங்கப்படும். - படம்: சாவ்பாவ்

அதிகரிக்கும் விலைவாசியைச் சமாளிக்க ஏறத்தாழ 1.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் $450 அல்லது $850 ரொக்க வழங்கீடு வழங்கப்படும் என்று ஜூலை 4ஆம் தேதியன்று நிதி அமைச்சு தெரிவித்தது.

$21,000 வரையிலான வருடாந்திர மதிப்புக் கொண்ட வீடுகளில் வசிப்போருக்கு $850 கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

$21,000க்கும் அதிகமான, $25,000 வரையிலான வருடாந்திர மதிப்புக் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு $450 வழங்கப்படும்.

“ரொக்க வழங்கீடு பெறத் தகுதிபெறும் அனைவரும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக $150 அல்லது $100 பெறுவர்,” என்று நிதி அமைச்சு கூறியது.

கடந்த 2023ல் $34,000 வரையிலான வருடாந்திர மதிப்பிடத்தக்க வருமானம் கொண்ட 21 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு ரொக்க வழங்கீடு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுக்கும் அதிகமான வீடுகளை வைத்திருப்போருக்கு இந்த ரொக்க வழங்கீடு வழங்கப்படாது.

65 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய ஏறத்தாழ 650,000 சிங்கப்பூரர்கள் ஆகஸ்ட் மாதம் தங்கள் மெடிசேவ் கணக்கில் அதிகபட்சம் $450 பெற்றிருப்பர்.

இந்த வழங்கீடுகள் பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பொருள் சேவை வரி அதிகரிப்பால் ஏற்படும் கூடுதல் செலவினங்களை குறைந்த வருமான சிங்கப்பூரர்களும் நடுத்தர வருமான சிங்கப்பூரர்களும் சமாளிக்க உதவ இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

ஜூலை 22ஆம் தேதிக்குள் பேநவ் கணக்குடன் தங்கள் அடையாள அட்டையை இணைக்கும்படி நிதி அமைச்சு சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கிறது.

அவ்வாறு செய்தால் ரொக்க வழங்கீடுகளை ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அது தெரிவித்தது.

பேநவ்-அடையாள அட்டை இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு இல்லாதோர் தங்களது வங்கிக் கணக்கு குறித்த ஆக அண்மைய தகவல்களை ஜூலை 26ஆம் தேதிக்குள் அரசாங்க சலுகைகள் தொடர்பான இணையப்பக்கத்திற்குச் சென்று அவை குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

‘ஜைரோ’ முறைப்படி வழங்கீடுகளைப் பெறுபவர்களுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதியிலிருந்து ரொக்க வழங்கீடு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளார் ஓய்வுபெற்ற தாதியான திருவாட்டி பார்வதி ரெங்கசாமி கோவிந்தசாமி. 73 வயதான இவருக்கு 850 வெள்ளி ரொக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 350 வெள்ளி மெடிசேவ் நிரப்புத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக 65 வயதுக்கும் மேற்பட்டோர் பலருக்கு சேமிப்பு குறைவாக இருக்கும். அவர்களது சொந்த செலவுகளுக்கும், மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்தத் தொகை உதவும் என்றார். மூத்தோர்கள் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ ஆதரவளிப்பது அவசியம் என்றும் சொன்னார் பார்வதி.

குறிப்புச் சொற்கள்