பாடங்கில் நடைபெறும் தேசிய தின அணிவகுப்பும் முன்னதாக சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை சார்பில் நடைபெறும் ‘நம் கொடியைப் பறக்கவிடுவோம்’ (Fly Our Flag) நிகழ்வும், ‘ஐலண்ட் ஃபிளைபாஸ்ட்’ வான்சாகசக் காட்சிகளும் குடியிருப்பு வட்டாரங்களில் நிகழ்த்தப்படும்.
‘நம் கொடியைப் பறக்கவிடுவோம்’
தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் தேசியக் கொடியின் ஆகாய பவனி சிங்கப்பூரர்களின் விருப்ப நிகழ்வாக மாறியுள்ளது.
மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் கொடி பவனி இரு வழிகளில் குடியிருப்புப் பகுதிகளைச் சென்றடையும்.
இரு சிஎச் 47 எஸ்டி/எஃப் ( CH-47SD/F) ரக ஹெலிகாப்டர்கள், நான்கு ஏஎச் - 64டி அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேசியக் கொடியைப் பறக்கவிட்டபடி சுவா சூ காங், புக்கிட் பாத்தோக், ஜூரோங், வெஸ்ட் கோஸ்ட் உள்ளிட்ட குடியிருப்பு வட்டாரங்களில் பறக்கும்.
தொடர்ந்து சிலேத்தார், செங்காங், பொங்கோல், பாசிர் ரிஸ், பிடோக் பாதையில் கொடி பவனி இடம்பெறும்.
‘ஐலண்ட் ஃபிளைபாஸ்ட்’ சாகச நிகழ்ச்சி
சிங்கப்பூரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஆறு எஃப்-16 ரக விமானங்கள் கிளமெண்டி, ஜூரோங் வெஸ்ட், சுவா சூ காங், புக்கிட் பாத்தோக், உட்லண்ட்ஸ், தோ பாயோ, சிலேத்தார், பொங்கோல், பெண்டமியர் பகுதிகளில் பறக்கவிடப்படும்.
‘கொடி பறப்பில் முக்கியப் பங்கு’
ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்கள் திரண்டிருக்க, அவர்கள் மத்தியில் தேசியக் கொடியைப் பறக்கவிட ஆர்வத்துடன் காத்திருக்கிறார் இரண்டாம் வாரண்ட் அதிகாரியும் ஆகாயப் பணிக்குழு நிபுணருமான மணிவண்ணன் பெருமாள், 46.
இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பின் கொடி பவனி நிகழ்ச்சியில் 127 படைப்பிரிவு சிஎச் 47 ஆகாயப் பணிக்குழுவில் பங்காற்றவுள்ளார் மணிவண்ணன்.
தொடர்புடைய செய்திகள்
“இந்நிகழ்வின்போது ஹெலிகாப்டர் குழுவினருடனும், உடன் பறக்கும் ஹெலிகாப்டர்களுடனும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருக்கும். அது சவாலான ஒன்றுதான் என்றாலும் செம்மையாக நிறைவேற்றுவோம் எனும் நம்பிக்கை உள்ளது,” என்றார் அவர்.
இதற்குமுன் பல ஆண்டுகளாக தேசிய தின அணிவகுப்புகளில் பங்கேற்றிருந்தாலும், வானில் தேசியக் கொடியைப் பறக்கவிடும் நிகழ்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது மிகவும் பெருமைக்குரியது என்கிறார் திரு மணிவண்ணன்.
வார இறுதி நாள்கள் அனைத்தும் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போவதைச் சுட்டிக்காட்டிய இவர், ஆயினும், குடும்பத்தினர் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆதரவாக இருப்பதாகவும் சொன்னார்.
உற்சாகத்துடன் உழைப்பு
‘தேசியக் கொடி பவனி’ நிகழ்வில் பொதுமக்கள் காணும் மூன்று கொடிகளுக்கு பின்னாலுள்ள பேருழைப்பைக் கோடிட்டுக் காட்டுகிறார், அக்குழுவில் அங்கம் வகிக்கும் ராணுவ வல்லுநர் 2, சூரியநாராயணன், 30.
இவ்வாண்டு அணிவகுப்பில், தேசிய சேவை மாணவர்களுடன் இணைந்து தேசியக் கொடிகளையும், கொடி பவனிக்குத் தேவையான கருவிகளையும் தயார்ப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
“மூன்று கொடிகள் திட்டமிட்டபடி பறப்பதற்கு 20 கொடிகளைத் தயார்நிலையில் வைத்திருப்போம்,” என்று கூறும் திரு சூரியநாராயணன், ஒவ்வொரு கொடியையும் துல்லியமாக செயல்பட்டுத் தயார்ப்படுத்த உரிய நேரமும் ஒருங்கிணைப்பும் தேவைப்படும் என்றார்.
பயிற்சியின்போது ஒவ்வொரு கொடியையும் 20 பேர் இணைந்து தயார்ப்படுத்த 2 மணி நேரம் ஆகும் என்றார் இவர்.
மேலும், “கொடி பவனி நிகழ்வின்போது, இரண்டு மணிநேரம் கொடியைத் தயார்ப்படுத்துவோம். அதன்பின்னர் மீண்டும் கொடிகளை மீட்டுச் சரிசெய்ய 50 பேர் முதல் 60 பேர் வரை பணியாற்றுவார்கள். இதற்கு நான்கு மணி நேரம் ஆகலாம்,” என்றும் திரு சூரியநாராயணன் சொன்னார்.
தேசியக் கொடி வானில் பறப்பதைக் காணும் உற்சாகத்துக்குமுன் இந்த உழைப்பும், தொடர் பயிற்சியும் பெரிதில்லை என்றார் மின்னியல் கருவி வல்லுநரான இவர்.
தன் மூன்று வயது மகன் வளர்ந்தவுடன் தன் தந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்காற்றியுள்ளார் என்பதை நினைத்து பெருமிதம் கொள்வார் என்று திரு சூரியநாராயணன் நம்புகிறார்.
உழைப்பைக் கண்டு வியப்பு
கொடி பவனி நிகழ்விற்காக திரைக்குப் பின்னால் நடக்கும் ஒருங்கிணைப்பையும், கடின உழைப்பையும் கண்டு வியக்கிறார் இவ்வாண்டு தேசியக் கொடி பவனி நிகழ்ச்சியில் முதன்மைக் குழு உறுப்பினராகப் பணியாற்றும் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக மாணவி லெப்டினெண்ட் கமீலா ராஜேந்திரன், 22.
கொடி பறப்பு திட்டமிட்டபடி சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்யும் பொறுப்பு தமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று சொன்னார் விமானப் போர்த்திற அதிகாரி கமீலா.
திறமைக்கு அங்கீகாரம்
எஃப் 16 எனும் ஃபைட்டிங் ஃபால்கன் போர் விமானங்களைத் தயார்நிலையில் வைத்திருக்கத் தேவையான பாகங்களின் செயல்பாட்டை உறுதிசெய்யும் குழுவை வழிநடத்துகிறார் ஆகாயப்படைப் பொறியாளர் சுகிதா ஜெயக்குமாரன், 43.
ராணுவம் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் தற்போது ஆண் பெண் பேதமின்றி வாய்ப்புகள் கிடைப்பதாகச் சொல்லும் இவர், திறமை இருந்தால் எங்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்கிறார். தேசத்துக்காக உழைக்கும் பணியைச் செய்வது தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பெருமை அளிப்பதாகவும் இவர் சொன்னார்.