தமிழ் முரசு நாளிதழின் 89ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகள், ஜூலை 6ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளன.
கடந்த ஆண்டு செயலி அறிமுகம் கண்ட அதே இடத்தில் இந்த மற்றொரு மைல்கல் நிகழ்விலும் வாசகர்களுடன் இணைய இருக்கிறது தமிழ் முரசு.
செய்தித்தாள், இணையப்பக்கம், சமூக ஊடகம், செயலி எனப் பல்வேறு தளங்களில் சமூகத்துடன் இணைந்தே பயணம் செய்யும் தமிழ் முரசு, இந்த நிகழ்ச்சியிலும் தமிழ்ச் சமூகத்தினரின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கும் வண்ணம் பல்வேறு முக்கிய அம்சங்கள் நடைபெறுகின்றன.
சமூகத்தின் குரல்
தொடக்க காலத்திலிருந்து சமூகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் தமிழ் முரசு, வாசகர்களின் குரலைக் கேட்க அவர்களிடமே வருகிறது.
இந்திய மரபுடைமை நிலைய வளாகத்தில் அமைக்கப்படவுள்ள சாவடியில், வாசகர்கள் தாங்கள் விரும்பும் அம்சங்கள் குறித்து தமிழ் முரசு செய்தியாளர்களிடம் பகிரலாம்.
அத்துடன், தமிழ் முரசு தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம், காணொளிகள், வலையொலிகள், சமூக ஊடகத்தில் வெளிவரும் செய்திகள் குறித்த கருத்துகளையும், தங்களின் எண்ணங்களையும் அவர்கள் பகிரலாம்.
கருத்து பகிரும் வாசகர்களுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்
புகைப்படங்கள் இல்லாமல் இந்நிகழ்வுகள் முழுமை பெறுவதில்லை.
அதற்கேற்ப, வாசகர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம். அவை உடனடியாக அச்சிட்டுத் தரப்படும்.
தமிழ் முரசுடன் இணைந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாசகர்கள், அப்புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றி, தமிழ் முரசுப் பக்கங்களை ‘டேக்’ செய்து தங்கள் வாழ்த்துகளைப் பகிரலாம்.
சந்தாதாரராகத் தமிழ் முரசுடன் இணையுங்கள்
தமிழ் முரசு அச்சிதழுக்கும், மின்னிலக்கத் தொகுப்புகளுக்கும் தமிழ் முரசின் சந்தாதாரராக இணையுங்கள். தமிழ் முரசின் பிறந்தநாளன்று சந்தாதாரராக இணையும் வாசகர்களுக்குப் பரிசுப் பொருள்களும் காத்திருக்கின்றன.
இது தவிர பிறந்தநாளன்று தமிழ் முரசு செயலியைப் பதிவிறக்கம் செய்வோருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இளையர் குரல் முக்கியம்
தலைமுறைகள் தாண்டி தமிழ்ச் சமூகத்துடன் பயணம் செய்யும் தமிழ் முரசு, அடுத்த தலைமுறையைச் சென்றடையும் நோக்கில் இளையர்களுக்கான கருத்தரங்கிற்கும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய மரபுடைமை நிலையத்தில் காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் அக்கருத்தரங்கில் இளையர்கள், தமிழ் மொழி மீதான பற்று, தமிழ்ப் புழக்கம், வாசிப்பு அனுபவங்களைப் பகிரலாம். தமிழ் மொழியில் தாங்கள் பார்க்க, படிக்க, கேட்க விரும்புபவை குறித்தும் பேசலாம்.
கருத்தரங்கில் பங்கேற்று, தங்கள் எண்ணங்களைப் பகிரும் இளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

