புதிய மோட்டார்சைக்கிள்களில் கட்டாய ‘மின்னணு பிரேக்’ சாதனம் பொருத்தப்படும் சாத்தியம் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இது குறித்து மோட்டார்சைக்கிள் விற்பனையாளர்களிடம் அது ஆலோசனை நடத்தி வருகிறது.
ஏபிஎஸ் (Anti-lock braking system) என்பது பூட்டுத் தடுப்பு நிறுத்துமுறையாகும். இது, சக்கரங்கள் தானாக பூட்டிக் கொள்வதைத் தடுக்கிறது. வாகனத்தை நிறுத்தும், கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இது மேலும் மேம்படுத்துகிறது.
சட்டப்படி இதற்கு அவசியம் இல்லையென்றாலும் தற்போது அனைத்து புதிய கார்களிலும் இந்தச் சாதனம் பொருத்தப்பட்டு வருகிறது.
இதற்கான புதிய விதிமுறைகள், தொடக்கமாக கிளாஸ் 2A (201சிசி - 400சிசி), கிளாஸ் 2 (401சிசிக்கு மேற்பட்டவை) ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கு 2025 ஜனவரி 1ஆம் தேதி அமல்படுத்த ஆணையம் உத்தேசித்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் மூலம் அறியப்படுகிறது.
இது பற்றி விவரமறிய முற்பட்டபோது, மோட்டார்சைக்கிள் தொழில் துறையினருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த உத்தேசத் திட்டத்தில் ஏன் ‘கிளாஸ் 2பி’ (200சிசிக்கு மேற்பட்டவை) மோட்டார்சைக்கிள்கள் உள்ளடக்கப்படவில்லை என்று கேட்டதற்கு, இது குறித்த மேல் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார் அந்தப் பேச்சாளர்
இங்குள்ள மோட்டார்சைக்கிள்களில் பெரும்பாலானவை 2பி வகையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை, ஏபிஎஸ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மோட்டார்சைக்கிள் தொடர்பான உயிரிழப்புகள் அதிகரித்ததால் வாகனப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர் அப்போது பேசியிருந்தார்.

