சமூகத்தின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் தமிழ் முரசு நாளிதழின் 89ஆவது பிறந்த நாளையொட்டி, இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வுகளில், பொதுமக்கள் கலந்துகொண்டு அவர்களின் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
பல்லாண்டுகாலமாக தமிழ் முரசின் வாசகர்களாக இருப்போர், தமிழ் முரசுக்கும் அவர்களுக்குமான தொடர்பையும் தங்கள் நினைவுகளையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.
பசுமையான நினைவுகள்
தமிழ் முரசின் வளர்ச்சி சொல்லொண்ணாப் பெருமையை அளிப்பதாகக் கூறி வாழ்த்தினார் தொடக்க காலத்திலிருந்தே தமிழவேள் கோ சாரங்கபாணியின் தளபதியாக, உடன் பயணித்த திரு பா தியாகராஜன், 85.
தமிழவேள் நற்பணி மன்றத்தின் தலைவரான இவர், “தலைவர் உயிருடன் இருந்திருந்தால் இளையர்களின் மொழிப் பங்களிப்பைக் கண்டு மிக்க மகிழ்சியடைந்திருப்பார். இதுதான் அவரது கனவாக இருந்தது,” என்று சொன்னார்.
பெண்களின் மனங்களில் தமிழ் முரசுக்குத் தனி இடம் உண்டு என்றார் தமிழ் முரசின் நெடுநாள் வாசகி திருவாட்டி மனோரஞ்சிதம் பரமதேவன், 76. சாதித்தோரின் கதைகளைப் படிப்பது சுவாரசியமாக இருக்கும் என்ற அவர், பெண்களின் சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்திகளும், பெண்களுக்குத் தெரிய வேண்டிய தகவல்களும் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்றும் சொன்னார். அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு சேர்க்கும் பணியில் தமிழ் முரசு ஈடுபட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். வீட்டு மருத்துவம் தனக்கு விருப்பமானது என்றும் அது செயலியில் வெளிவருவது மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டுச் செய்திகளை விரும்பிப் படிக்கும் நீண்டநாள் வாசகரான கே ஆர் லெட்சுமணன், 81 இளையர்களைக் கவரும் பல்வேறு விதமான புது விளையாட்டுகள் குறித்த செய்தி வரவேண்டும் என விரும்புவதாகக் கூறினார். வில்வித்தைப் பயிற்சியாளரான இவர், அனைத்துலக அளவில் விளையாட்டில் இளையர்கள் சாதிக்க வேண்டுமென்றால், அதுகுறித்த வியப்பூட்டும் தகவல்களை சிறு வயதிலிருந்தே படிக்க வைக்க வேண்டும். அதற்கு தமிழ் முரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தனது நாள் தமிழ் முரசை படிக்காமல் தொடங்குவதில்லை என்றார் கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழ் முரசு படித்து வரும் திரு முகமது அலி, 80. வாழ்வும் வளமும் பக்கத்தில் வரும் தகவல்கள் தனக்கு விருப்பமானவை எனக் கூறிய அவர், செய்தித்தாள் வாங்கி வைப்பது, தங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளை நேரம் கிட்டும்போது படிக்கத் தூண்டும் என்றும் சொன்னார்.
தமிழ் முரசில் அவ்வப்போது வெளிவரும் கதை, கவிதைகள் தனக்கு விருப்பமானவை என்றார் நாதன் ஜோண்டாஸ், 67. இளையர்களின் கதைகளையும் எழுத்துகளையும் வெளியிட்டு ஊக்குவித்தால் அவர்களிடம் தமிழ்ப் புழக்கம் அதிகரிக்கும் என்பது அவரது நம்பிக்கை.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த தலைமுறையின் எதிர்பார்ப்புகள்
வீட்டில் பெரியவர்கள் துணையின்றி பிள்ளைகளை வளர்க்கும் இளம் பெற்றோர்க்கு உதவும் வண்ணம் குழந்தை நல மருத்துவர், வல்லுநர்கள் போன்றோர் சொல்லும் தகவல்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்றார் குடும்பத் தலைவியான யஷ்வந்தி, 28.
சிங்கப்பூர்த் தமிழ் சமூகம் குறித்த செய்திகள் வெளிவருவது சிறப்பாக உள்ளது. உள்ளூரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டால் உதவியாக இருக்கும் என்றார் நீண்ட நாள் தமிழ் முரசு வாசகரான திரு முரளி கிருஷ்ணன், 64.
தன் மாணவர்களிடம் அன்றாடம் தமிழ் முரசு படிக்கச் சொல்லி ஊக்குவிப்பதாகச் சொன்னார் ஆசிரியை பானுபிரியா, 32. சிறுவர்களிடையே தமிழ் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டுவர அது உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தனிப்பட்ட முறையில் அரிய உலகத் தகவல்கள், வரலாற்றுச் செய்திகள் வலையொளி வடிவில் வந்தால் பயணநேரத்தில் கேட்கலாம் எனக் கூறினார்.
இந்தியச் செய்திகளைவிட உள்ளூர்ச் செய்திகளை உடனுக்குடன் இரு வரிகளில் பதிவிட்டால் வசதியாக இருக்கும் என்றார் தமிழ் முரசு செயலிப் பயனர் ஜோ மில்டன், 52. தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்த செய்திகளை வெளியிட்டு இளையர்களைத் தமிழ்முரசின்பால் ஈர்க்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ் முரசுக்கும் தனக்கும் 30 ஆண்டு உறவு இருப்பதாகக் கூறினார் யோகா ஆசிரியர் ஜீவன். தனது தமிழ் நன்றாக இருப்பதற்கு தமிழ் முரசு முக்கியக் காரணம் என்ற அவர், இளையர்களைக் கவரும் வகையில் கல்வி, புதிய படிப்புகள் குறித்த செய்திகள் வெளிவர வேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னார்.
அன்றாட முக்கியச் செய்திகளை நாளின் பல்வேறு நேரங்களில் அவ்வப்போது சிறுகாணொளிகளாக வெளியிடக் கோரினார் தமிழ் முரசின் குறுங்காணொளி ரசிகரான திரு சண்முகநாதன், 38. நாள்தோறும் ஐந்து முக்கியச் செய்திகளை வெளியிடலாம் என்பது அவரது கருத்து.
அறிவியல் செய்திகளையும், மாணவர்களுக்கான தொழில்நுட்ப, புத்தாக்கப் போட்டிகள் குறித்த தகவல்களையும் வெளியிட்டால் உதவியாக இருக்கும் என்று கருதுகிறார் திருவாட்டி சுவர்ணலட்சுமி, 43. தன் மகனுக்குத் தமிழார்வத்தை ஊட்ட தமிழ் முரசு ஒரு கருவியாக அமைவதில் மகிழ்ச்சி என்றும் சொன்னார்.
சிங்கப்பூரின் வரலாறு, தமிழின் தொன்மை, நாம் அன்றாடம் காணும் இடங்களின் கதைகளைக் காணொளியாகவும் வலையொலியாகவும் வெளியிடும்படி வேண்டுகோள் விடுத்தார் உலகச் செய்திகளை விரும்பிப் படிக்கும் தொழில்நுட்பத்துறை ஊழியரான திரு ராதாகிருஷ்ணன், 58. சிறுவர்களை ஈர்க்க குறுங்காணொளிகள்தான் வழி என்று சொல்லும் இவர், அவர்கள் ரசிக்கும் வண்ணம் இன்னும் பல காணொளிகளை வெளியிடும்படி கேட்டுக்கொண்டார்.
பெண்களின் ரசனைக்கேற்ற செய்திகளையும் தகவல்களையும் அவ்வப்போது வெளியிட்டால் குடும்பத் தலைவிகளின் அன்பைப் பெறலாம் என்பது 52 வயதான திருவாட்டி மல்லிகாவின் எண்ணம். சிறுவர்களுக்குப் புவியியல் தொடர்பான வண்ணப் படங்களுடன் தகவல்களை வெளியிடலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
டிக் டாக் காணொளிகள் மூலம் செய்திகளைத் தெரிந்துகொள்ளும் உற்பத்தித் துறை ஊழியர் திரு பாக்கியநாத், 35, உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ளவும் சிங்கப்பூர் வரலாற்றை அறிந்துகொள்ளவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.
சமூக ஊடகங்கள்வழி செய்திகளை அறிந்துகொள்ளும் திரு ஆறுமுகம் நாகராஜன், 37, உலக அரசியல் வலையொலிகளைக் கேட்க ஆர்வமிருப்பதாகச் சொன்னார்.

