தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் துன்புறுத்தல் புகார் அளிப்பதில் அதிக விழிப்புணர்வு

2 mins read
4b588b8c-352d-4896-ac39-64097d95b42a
பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பற்றி புகார் அளிப்பதில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டதற்கு ‘மீ டூ’ (#MeToo) இயக்கம் அதிகம் பங்களித்ததாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: பெக்சல்ஸ்

கடந்த காலங்களில் வேலையிடத்தில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை வெளியில் சொல்லும் அளவுக்கு பெண்கள் விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருந்திருக்கலாம்.

ஆனால், தற்போது அத்தகைய துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிக்க அதிக பெண்கள் முன்வருவதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கான நீதிமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பதற்கான 73 ஆணைகள் கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளன. 2022ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 69 ஆக இருந்தது.

துன்புறுத்தல் சம்பவங்களுக்கான சிறப்பு நீதிமன்ற விசாரணை 2021 ஜூனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021 ஜூன் முதல் 2021 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக 34 பாதுகாப்பு ஆணைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதிகமானோர் புகார் அளிக்கும் அளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்தது குறித்து ஃபார்வர்ட் லீகல் என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஃபோங் வெய் லி கருத்துக் கூறினார்.

“பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பற்றி புகார் அளிப்பதில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. ‘மீ டூ’ (#MeToo) என்பது போன்ற இயக்கங்களும் அந்த விழிப்புணர்வுக்குப் பங்களித்து உள்ளன.

“ஆலோசனை மற்றும் கல்வி புகட்டல் பிரசாரங்களும் அத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க துணிச்சல் ஊட்டி உள்ளன,” என்றார் அவர்.

‘மீ டூ’ இயக்கம் 2017ஆம் ஆண்டு தொடங்கியது. அமெரிக்க நடிகை அலிசா மிலானோ அப்போது பதிவிட்ட ஒரு டுவிட்டர் தகவல் இணையத்தில் அதிகம் வலம் வந்தது.

பாலியல் துன்புறுத்தல்களுக்கும் தொந்தரவுகளுக்கும் ஆளானவர்கள் சமூக ஊடகத்தின் ‘மீ டூ’ பக்கத்தில் பதிவிட அந்த நடிகை ஊக்கம் தந்தார்.

ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் போன்ற பொழுதுபோக்கு, அரசியல், வர்த்தகம் போன்றவற்றில் பிரபலமாகத் திகழும் ஆண்களுக்குப் பாடம் புகட்ட அந்தப் பிரசாரம் உதவியது.

சில நாடுகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக அளிக்கப்படும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு அந்தப் பிரசாரம் காரணம் என்பதை ஆய்வுகள் கண்டறிந்தன.

குறிப்புச் சொற்கள்