தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண் குளிப்பதைக் காணொளி எடுத்தவருக்குச் சிறை

2 mins read
182244d8-954a-483c-a432-3bb97a351051
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரில் இஸ்கந்தர் முகம்மது கஸாலி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) உள்ள கழிவறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண்ணை அவருக்குத் தெரியாமல் காணொளி எடுத்த தொழில்நுட்பர் ஒருவருக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

32 வயது ரில் இஸ்கந்தர் முகம்மது கஸாலி, 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதியன்று இக்குற்றத்தைப் புரிந்தார்.

தமது கைப்பேசியைப் பயன்படுத்தி பெண் ஒருவர் குளிப்பதை அவர் காணொளி எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் கழித்து ரில் மீண்டும் அந்தப் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பினார்.

பல்கலைக்கழக விடுதியில் தங்கிய பெண் ஒருவரின் உடைமைகளைத் தொடும் எண்ணத்துடன் அவர் அங்கு நுழைந்தார்.

ரில்லின் செயலால் பாதிக்கப்பட்ட 22 வயது பெண் என்டியு மாணவி அல்ல. அங்கு பயிலும் தமது தோழியைக் காண அங்கு சென்றிருந்தார்.

ரில் தம்மை காணொளி எடுப்பது தெரிய வந்ததும் குளித்துக்கொண்டிருந்த அப்பெண் அதிர்ச்சியில் கத்தினார்.

ரில் அங்கிருந்து தப்பி ஓடினார்.

சில நாள்கள் கழித்து அந்தக் காணொளிப் பதிவுகளை அவர் தமது கைப்பேசியிலிருந்து நீக்கினார்.

இதற்கிடையே, நடந்ததைப் பற்றி பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் தமது தோழியிடம் தெரிவித்தார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்தில் ரில் இருந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

2023ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதியன்று ரில், என்டியுவுக்குத் திரும்பினார்.

மற்றொரு மாணவர் தங்குவிடுதிக்கு அவர் சென்றார்.

அங்கு இன்னொரு 22 வயது பெண்ணின் அறைக்குள் அவர் அத்துமீறி புகுந்தார்.

வாசலில் இருந்த காலணி வைக்குமிடத்தில் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை அவர் எடுத்து அறைக்குள் நுழைந்தார்.

அந்த அறைக்குப் பக்கத்து அறையில் தங்கிய பெண் சத்தம் கேட்டு அங்கு சென்றார்.

அந்த அறையிலிருந்து பொருள் ஒன்றை எடுத்து வரச் சொல்லி தாம் அனுப்பிவைக்கப்பட்டதாக ரில் பொய் கூறினார்.

அறையின் சாவி மெத்தை மேல் இருப்பதைப் பார்த்த அப்பெண், ரில் உண்மையைக் கூறுகிறார் என்று நம்பி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

ரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பிறகு அந்த அறையில் தங்கிய பெண்ணுடன் பக்கத்து அறை பெண் தொடர்புகொண்டு நடந்தவற்றைப் பற்றி கூறினார்.

தாம் யாரையும் அறைக்கு அனுப்பிவைக்கவில்லை என்று அப்பெண் கூறியதை அடுத்து, அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் ரில்லை அதே நாளன்று கைது செய்தனர்.

ரில் தற்போது $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறைத் தண்டனையை அவர் ஜூலை 25ஆம் தேதியன்று தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்