மறுவிற்பனை வீடுகளில் மில்லியன் வெள்ளிக்கு விற்பனையான வீடுகள் ஜூன் மாதம் ஆக அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த மாதம் மில்லியன் வெள்ளிக்கு விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 என்றும் மறுவிற்பனை வீட்டு விலைகள் புதிய உச்சத்தை எட்டின என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் எஸ்ஆர்எக்ஸ், 99.காம் சொத்து முகவைகள் முன்னோடி கணிப்புகளை திங்கட்கிழமை (ஜூலை 8) வெளியிட்டது. அதில் ஜூன் மாதம் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 1.8% ஏற்றம் கண்டது தெரிய வந்துள்ளது. இந்த விலை உயர்வு தொடர்ந்து ஒன்பது மாதங்களாக ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் கடந்த மாதத்திலிருந்தே, முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சியடையாத பேட்டைகளில் விற்கப்பட்ட அனைத்து விதமான வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை ஏற்றம் கண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விற்கப்பட்ட மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை ஜூன் மாதம் 13.1 விழுக்காடு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் ஜூன் மாதம் 2,184 வீடுகள் விற்கப்பட்டன என்றும் ஒப்புநோக்க, மே மாதம் 2,513 மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த 2023ஆம் ஆண்டின் இதே காலத்தில் விற்பனையான வீடுகளைவிட இவ்வாண்டு 17.5 விழுக்காடு வீடுகள் அதிகமாக விற்பனையாயின என்று கூறப்பட்டுள்ளது.
மில்லியன் வெள்ளிக்கு குறையாமல் விற்கப்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் எண்ணிக்கை மொத்த மறுவிற்பனை வீடுகளில் 4.4 விழுக்காடாகும். மாத அடிப்படையில் இப்படி விற்பனையான வீடுகள் ஜூன் மாதம் 96ஆக இருந்தது. இதுவே மே மாதம் 74ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

