‘ஐந்து வயது மகளைக் கொன்றதந்தைக்குப் பிரம்படி விதிக்க முடியாது!’

3 mins read
6dd76fb4-a1db-4d8b-a6b6-43f115b2c6b2
ஆயிஷாவும் அவரது சகோதரரும் கழிவறையில் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்டனர். - படம்: நீதிமன்ற ஆவணம்

ஐந்து வயது மகளைக் கொன்ற தந்தைக்குப் பிரம்படி விதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆடவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 34½ ஆண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

இரண்டு பிள்ளைகளையும் பட்டினிப் போட்டு கொடுமைப்படுத்தியதால் அவர்களில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.

பிரம்படித் தண்டனைக்கு அந்த 44 வயது நபர் ஏற்றவர் அல்லர் என்று மே 13ஆம் தேதி மருத்துவச் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

ஜூலை 9ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், அவருக்கு முதுகெலும்பு அழுத்தம், பலவீனம் தொடர்பான பிரச்சினை இருப்பதாகத் தெரிவித்தனர்.

ஆனால் பிரம்படித் தண்டனைக்குப் பதிலாக கூடுதலாக ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

நீதிபதி அதை ஏற்றுக் கொண்டு கூடுதலாக ஆறு மாதம் தண்டனை விதித்தார்.

உயிர் பிழைத்த சிறுவன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தந்தையின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் இந்தக் கொடூரமான சம்பவத்தை சமூகம் நினைவுகூற வேண்டும் என்பதற்காக மகளின் ஆயிஷா என்ற முதல் பெயரை வெளியிட நீதிபதி அப்துல்லா அனுமதியளித்தார்.

இரண்டு குழந்தைகளும் ஆடவரின் முந்தைய திருமணத்தில் பிறந்தவர்கள். 2015ஆம் ஆண்டில் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளுடன் சேர்த்து, மறுமணத்தின் வழி மேலும் மூன்று குழந்தைகள் இருந்தனர்.

2015ஆம் ஆண்டிலிருந்து அவர் குழந்தைகளைத் துன்புறுத்தத் தொடங்கினார்.

ஆயிஷாவுக்கும் அவரது இளைய சகோதரருக்கும் அவர் சரியாக உணவு கொடுக்காததால் பட்டினியால் அவர்கள் சொந்த மலக்கழிவையே சாப்பிட்டனர்.

அதே ஆண்டின் இறுதியில் அந்த நபரின் 2வது மனைவியும் அப்போது மூன்று வயதான ஆயிஷாவையும் அவரது இரண்டு வயது சகோதரரையும் அடிக்கத் தொடங்கினார். 2016 பிப்ரவரி முதல் அக்டோபர் வரை அவர்கள் ஓர் ஓரத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

உணவுக்கும் குளிப்பதற்கும் மட்டும் அவர்கள் வெளிவர அனுமதிக்கப்பட்டனர். 2016 அக்டோபர் முதல் இரு குழந்தைகளும் நிர்வாணமாக கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களைக் கண்காணிக்க அவர் கேமராவையும் பொருத்தியிருந்தார்.

2017 ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆயிஷா பற்றி மனைவி புகார் தெரிவித்ததால் அந்த ஆடவர் ஆயிஷாவின் முகத்தில் 15 முதல் 20 முறை வரை அறைந்தார்.

2017 ஆகஸ்ட் 11ஆம் தேதி விடியற்காலை 3.00 மணியளவில் மனைவி மீண்டும் புகார் தெரிவித்ததால் குழந்தைகளை அவர் எட்டி உதைத்து, ஆயிஷாவை மிதித்து முகத்தில் குத்தினார்.

அன்று மாலை ஆயிஷா அசைவின்றிக் கிடந்ததை அவரது மனைவி கண்டுபிடித்தார். 2017 ஆகஸ்ட் 12ஆம் தேதி கண்காணிப்புக் கேமரா போன்ற ஆதாரங்களை அகற்றி இரு குழந்தைகளையும் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆனால் ஆயிஷா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

2023 ஜூலையில் அவர்மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணையின் நடுவில் அவர் மீதான குற்றச்சாட்டு நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றச்சாட்டாக மாற்றப்பட்டது.

அவரது மனைவிக்கு எதிராக வழக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நொரின் டான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்