ஹோட்டல் பிராப்பர்டிஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரான சொத்து மேம்பாட்டாளரான ஓங் பெங் செங், மலேசியாவின் கிழக்குக் கரைக்கு அப்பால் உள்ள தியோமான் தீவில் உல்லாசத் தலத்தைத் திறந்துள்ளார்.
ஜூலை 1ஆம் திறப்பு விழா கண்ட அந்த சொகுசு உல்லாசத் தலத்தைக் கட்டி முடிக்க மூன்றாண்டுகள் பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தீவில் அவர் கட்டிய படகுவீடுகளில் 31 பங்களா அளவிலான வீடுகள் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. தியோமான் தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ள இந்த படகுவீடுகளை மலேசியாவின் பிரபல விடுமுறைக்கால இடமான கம்போங் ஜென்டிங்கிலிருந்து படகு மூலம் 10 நிமிடங்களில் சென்றடையலாம்.
மலேசியா, ஐரோப்பிய நாடுகள், வட ஆசிய நாடுகள், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த உல்லாசத் தலத்தில் ஓர் இரவு வாடகை 1,200 (S$340) மலேசிய ரிங்கிட்டிலிருந்து தொடங்குகிறது. அத்துடன், இதைவிட உயர் ரக தங்குமிட வசதியை நாடும் பயணிகளின் தேவையையும் இந்த உல்லாசத் தலம் பூர்த்தி செய்யவல்லது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

