ஈரானிய வான்வெளியில் ஜூன் 27ஆம் தேதி முதல் விமானங்கள் மீண்டும் பறக்கத் தொடங்கின.
அதிலிருந்து, சிங்கப்பூரிலிருந்து ஃபிராங்ஃபர்ட், இஸ்தான்புல் போன்ற இடங்களுக்கும் அந்தப் பகுதிகளிலிருந்து சிங்கப்பூருக்கும் ஸ்கூட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய விமானச் சேவைகள் மூலம் பயணம் மேற்கொள்பவர்கள் முன்பை விட விரைவாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்துவிடுகின்றனர்.
இஸ்ரேலியப் பகுதியின்மீது ஈரான் ஏப்ரல் 13ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து விமான நிறுவனங்கள் ஈரானிய வான்வெளியில் பறப்பதை நிறுத்தின.
சிங்கப்பூர், ஆம்ஸ்டர்டாம், பிரஸ்சல்ஸ், கோபன்ஹேகன், ஃபிராங்ஃபர்ட், இஸ்தான்புல், லண்டன், நியூயார்க் (ஜெஎஃப்கே), நியூயார்க் (நியூவார்க்), மான்செஸ்டர், மிலான், மியூனிக், பாரிஸ், ரோம், ஸீரிக் ஆகிய 14 இடங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஈரானிய வான்வெளியில் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கும் ஏதன்சுக்கும் இடையே இயக்கப்படும் ஸ்கூட் விமானங்களும் ஈரானிய வான்வெளியில் பறக்கத் தொடங்கியுள்ளன.