நாசிம் சாலை விபத்து: இங் ஹா சியோ பக் குட் தே உணவக நிறுவனர்மீது குற்றச்சாட்டு

2 mins read
9c677ced-6319-4e34-9b3b-29bf8eb5977f
திரு டானுக்குக் கடுமையான காயம் ஏற்படுத்திய மற்றொரு குற்றச்சாட்டையும் இங் சியாக் எதிர்கொள்கிறார். - படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தங்ளின் சாலை நோக்கி செல்லும் நாசிம் சாலையில் கவனக்குறைவாக காரை ஓட்டி ஒருவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக இங் ஹா சியோ பக் குட் தே உணவகத்தின் நிறுவனர் இங் சியாக் ஹாய் மீது புதன்கிழமையன்று (ஜூலை 10) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த விபத்து 2022ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் நடந்ததாகக் கூறப்பட்டது. 87 வயதான இங் சியாக் காரை ஓட்டிச் சென்றபோது அவர் காரின் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இங் சியாக் இடதுபுறமாக காரை வளைத்தபோது, அது ​​மரத்தில் மோதி வலதுபுறமாகக் கவிழ்ந்ததாகக் கூறப்பட்டது.

இந்த விபத்தில் அவருடன் பயணித்த 72 வயது இங் திட் ஹங் மாண்டதாகவும் மற்றோர் நபரான 75 வயது டான் டெக் சூனுக்குக் காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

மற்ற சாலைப் பயனர்கள்மீது உரிய கவனமில்லாமல் கவனக்குறைவாக காரை ஓட்டி இங் திட் ஹங்குக்கு மரணம் விளைவித்ததாக இங் சியாக்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

திரு டானுக்குக் கடுமையான காயம் ஏற்படுத்திய மற்றொரு குற்றச்சாட்டையும் இங் சியாக் எதிர்கொள்கிறார்.

திரு டான், இங் சியாக்குடன் பயணித்தாரா என்பது குறித்த விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இல்லை.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் காரில் பயணித்த இங் சியாக் உட்பட மூவரையும் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி மீட்டனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மூவரில் இங் திட் ஹங் மாண்டார்.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை இங் சியாக் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்