தன் மனைவியைக் காவல்துறையிடம் சிக்க வைப்பதற்காக அடுக்கடுக்காகப் பொய்யுரைத்த 39 வயது ஆடவருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை புதன்கிழமையன்று (ஜூலை 10) விதிக்கப்பட்டது.
அரசு ஊழியருக்குத் தவறான தகவல்களை வழங்கியதாகவும் தவறான ஆதாரங்களைத் தந்ததாகவும் அந்த ஆடவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
தன்னைத் தானே கத்தியால் காயப்படுத்திக் கொண்டு தன் மனைவி தன்னைத் தாக்கியதாகவும் தனது இரண்டு வயது மகனின் கழுத்தை நெரித்துத் தன் மனைவி கொலை செய்ய முயன்றதாகவும் அவர் காவல்துறையிடம் பொய்யுரைத்தார்.
அவர் அளித்த புகாரையடுத்து, 42 வயதான அந்த ஆடவரின் மனைவியைக் காவல்துறையினர் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.
மேலும், அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு மனநலக் கழகத்தில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.
மனநலக் கழகத்தில் இருந்து அவரது மனைவி விடுவிக்கப்பட்ட இரண்டு நாள் கழித்து, அந்த ஆடவர் தன் மனைவி குறித்துத் தெரிவித்த அனைத்து விவரங்களும் பொய் என அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார்.
தம்பதியினர் இன்னும் ஒன்றாக வாழ்கிறார்களா என்பது குறித்த விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.

