அனைத்துலக அளவில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் மற்றும் நிறுவனங்களின் ரகசியத் தகவல்களைப் பெற்று பணம் ஈட்டிய குற்றம் புரிந்து மில்லியன்கணக்கில் பணம் பறித்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க 33 வயது கே சீ சிங்கப்பூரில் ஜூலை 3ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். ஜூலை 4ஆம் தேதியன்று அவர் அரசு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நாடு கடத்தும் சட்டத்தின்கீழ் அவரைத் தடுத்து வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தி மெசசூசட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்த அமெரிக்க அதிகாரிகள் விண்ணப்பிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
கேவும் அவருடன் இணைந்து சதி திட்டம் தீட்டியவர்களும் ஒன்றுசேர்ந்து மோசடி புரிந்து சட்டவிரோதமாக மில்லியன்கணக்கில் பணம் பறித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தை அவர்கள் பல்வேறு வழிகளில் நல்ல பணமாக மாற்றியதாக நம்பப்படுகிறது.
சட்டவிரோதமாகப் பெறப்பட்ட $300,000 தொகையை ஹாங்காங்கில் உள்ள வங்கிக் கணக்கில் செலுத்துமாறு தம்முடன் இணைந்து மோசடி புரிந்த ஒருவரிடம் கே கூறியதாக அறியப்படுகிறது.
பழைய கைக்கடிகாரங்களை விற்கும் வர்த்தகருக்கு அதைக் கொடுக்க வேண்டும் என கே தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் 28ஆம் தேதியன்று கேக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால் வழக்கு குறித்து மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.