பாதுகாப்பான பகுதிகளின் மேல் வானூர்தியைப் பறக்கவிட்ட 4 ஆடவர்கள்

பாதுகாப்பான பகுதிகளின் மேல் வானூர்தியைப் பறக்கவிட்ட 4 ஆடவர்கள்

1 mins read
71a922cb-1676-47f1-9b41-db737794a2a8
பாதுகாக்கப்பட்ட வட்டாரங்களில் ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட்டு, படம் எடுக்கும் குற்றத்திற்கு $50,000 வரையிலான அபராதமும் ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாதுகாக்கப்பட்ட வட்டாரங்களில் ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட்டது தொடர்பான குற்றங்களுக்காக நான்கு ஆடவர்கள் மீது வியாழக்கிழமை (ஜூலை 11) குற்றம் சுமத்தப்பட உள்ளது.

ஆடவர்கள் நால்வரும் 45 வயதுக்கும் 68 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இதனை காவல்துறை புதன்கிழமை (ஜூலை 10) அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.

கடந்த மார்ச் 9ஆம் தேதி, 56 வயது ஆடவர் ஒருவர் மரினா பேயில் கடல்மட்டத்தில் இருந்து 499 மீட்டர் உயரத்திற்கு, 25 நிமிடங்களுக்கு மேல் ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட்டார். வானூர்தி மூலம் அந்த வட்டாரத்தை அவர் காணொளிப் படமாக எடுத்தார்.

அதேபோல, மார்ச் 27ஆம் தேதி, 47 வயது ஆடவர் மரினா அணைகரையில் கடல்மட்டத்தில் இருந்து 468 மீட்டர் உயரத்திற்கு 15 நிமிடங்களுக்கு மேல் வானூர்தியைப் பறக்கவிட்டு படம் எடுத்த குற்றம் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதே மரினா அணைகரையில் ஜூன் 25ஆம் தேதி 68 வயது ஆடவர் வானூர்தியைப் பறக்கவிட்டு அதில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் படமும் காணொளியும் எடுத்தார். அந்த வானூர்தியின் எடை 565 கிராம்.

மற்றொரு பாதுகாக்கப்பட்ட வட்டாரமான சின் சுவீ ரோட்டில் ஜூன் 23ஆம் தேதி 51 வயது ஆடவர் வானூர்தியைப் பறக்கவிட்ட குற்றத்தைப் புரிந்தார்.

பாதுகாக்கப்பட்ட வட்டாரங்களில் ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட்டு, படம் எடுக்கும் குற்றத்திற்கு $50,000 வரையிலான அபராதமும் ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்