சாங்கி விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘ஐஃபெரெட்’ செயற்கை நுண்ணறிவுத் திட்டம் என்சிஎஸ் எனும் தொழில்நுட்பச் சேவை வழங்கும் நிறுவனம் நடத்திய மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த மாநாடு ஜூலை 11ஆம் தேதி மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
சாங்கி விமான நிலைய ஓடுபாதைகளில் உலோகப் பாகங்கள், மடிந்த விலங்குகள் போன்றவை கிடந்தால் அதை இந்த ‘ஐஃபெரெட்’ செயற்கை நுண்ணறிவு முறை கண்டுபிடித்துவிடும்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஓடுபாதையில் தரையிறங்கும் அல்லது அங்கிருந்து கிளம்பிச் செல்லும் விமானங்கள் சேதமடைவதைத் தவிர்க்க முடியும்.
இந்தத் திட்டத்தை முன்னிட்டு சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகள் நெடுகிலும் உயர்தர கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அந்த கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்கும்.
ஓடுபாதையில் கிடக்கும் 4 சென்டிமீட்டர் அளவிலான மிகச் சிறிய பொருளைக்கூட இந்தச் செயற்கை நுண்ணறிவு முறை மூலம் கண்டுபிடித்துவிட முடியும்.
‘ஐஃபெரெட்’ திட்டம் என்சிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டிறுதிக்குள் சாங்கி விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளிலும் இந்த அணுகுமுறை கையாளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற இன்னொரு திட்டத்தை சாங்கி விமான நிலையம் 2008ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்தது.
ஆனால் தற்போது கூடுதல் துல்லியமான முறைக்கு அது மாறிவிட்டது.
இந்தத் திட்டம் நடப்பில் இருப்பதால் ஓடுபாதைகளில் ஏதேனும் பொருள்கள் கிடக்கிறதா என்பதைக் கண்டறிய விமான நிலைய ஊழியர்களை மட்டும் நம்பியிருக்கத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3,000 ஊழியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக என்சிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பள்ளிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை வழங்கும் பயிற்சிகளிலும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் தொடர்புப் பணிகள் உருமாற்றுத் திட்டம் மற்றும் டெக்ஸ்கில் அக்சலரேட்டர் திட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் திட்டங்களிலும் அந்த ஊழியர்கள் பயிற்சி பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு நிபுணர்களாவதற்கு இவர்களில் 300 ஊழியர்களுக்கு இன்னும் ஆழமான பயிற்சிகள் அளிக்கப்படும்.
மாநாட்டில் பேசிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், செயற்கை நுண்ணறிவும் புதிய தொழில்நுட்பங்களும் பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என்று தெரிவித்தார்.
ஊழியர்களும் மக்களும் பலனடைய வேண்டும் என்பதே இலக்கு என்றார் அவர்.

