‘டிரான்ஸ்கேப் நிறுவனத்தை கிராப் எடுத்துக்கொண்டால் போட்டித்தன்மை பலவீனமடையும்’

2 mins read
2b61d81e-28e1-4923-a54e-e68597b4a5d6
டிரான்ஸ்கேப் நிறுவனத்தை கிராப் எடுத்துக்கொண்டால் தனியார் வாடகை கார் துறையில் அதன் ஆதிக்கம் கூடும் என்றும் இதன் காரணமாக ஓட்டுநர்களும் பயணிகளும் பாதிப்படைவர் என்றும் சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் கவலை தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டிரான்ஸ்கேப் டாக்சி நிறுவனத்தை எடுத்துக்கொள்ள தனியார் வாடகை கார் சேவை ஜாம்பவானான கிராப் நிறுவனம் முன்வந்துள்ளது.

கிராப்பின் திட்டம் நிறைவேறினால், தனியார் வாடகை கார் சேவை வழங்கும் மற்ற நிறுவனங்கள் பலவீனமடையும் என்ற கவலை எழுந்துள்ளது.

இதன்மூலம் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்குமான கட்டணம் அதிகரிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் ஜூலை 11ஆம் தேதியன்று தெரிவித்தது.

தனியார் வாடகை கார் சேவைத் துறையில் கிராப் நிறுவனம் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தி வருவதாக ஆணையம் கூறியது.

இதில் டிரான்ஸ்கேப் நிறுவனத்தை அது எடுத்துக்கொண்டால் அதன் ஆதிக்கம் கூடும் என்றும் இதன் காரணமாக ஓட்டுநர்களும் பயணிகளும் பாதிப்படைவர் என்றும் ஆணையம் அக்கறை தெரிவித்தது.

டிரான்ஸ்கேப் நிறுவனத்தை கிராப் எடுத்துக்கொண்டால் தனியார் வாடகை கார் துறையில் போட்டித்தன்மை பேரளவில் குறையும் என்றும் போட்டித்தன்மைச் சட்டம் மீறப்படும் என்றும் ஆணையம் கூறியது.

ஆணையம் முன்வைத்துள்ள கவலைக்குத் தீர்வு காண கிராப் நிறுவனத்துக்கும் டிரான்ஸ்கேப் நிறுவனத்துக்கும் 10 பணி நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், எடுத்துக்கொள்வதை அனுமதிப்பதா தடுப்பதா என்பது குறித்து ஆணையம் முடிவெடுக்கும்.

டிரான்ஸ்கேப் நிறுவனத்தை எடுத்துக்கொள்ள கிராப் நிறுவனம் முன்வந்திருக்கும் செய்தியை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ்தான் 2023ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதியன்று வெளியிட்டது.

டிரான்ஸ்கேப் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏறத்தாழ 2,000 டாக்சிகள், 300க்கும் அதிகமான தனியார் வாடகை கார்கள், டிரான்ஸ்கேப்பின் வாகனப் பணிமனை, எரிபொருள் நிலையங்கள் ஆகியவற்றை கிராப் எடுத்துக்கொள்ள செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்