உணவு பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக தெம்பனிசில் உள்ள அபு முபாரக் உணவகத்துக்கு $4,700 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு அந்த உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு இரைப்பைக் குடல் அழற்சி ஏற்பட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
2023 ஏப்ரல் மாதம் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் அத்தகைய 12 சம்பவங்கள் தொடர்பான புகார்களைப் பெற்றன.
300 தெம்பனிஸ் அவென்யூ 5 என்னும் முகவரியில் இயங்கிய அபு முபாரக் உணவகத்தில் சாப்பிட்டதன் மூலம் உடல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அளித்த புகார்கள் அவை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
இரைப்பைக் குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.
சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் இணைந்து அந்த உணவகத்தில் மேற்கொண்ட விசாரணையில், உணவுப் பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது.
உணவு தயாரிக்கும் பகுதியில் ஏராளமான கரப்பான் பூச்சிகள் இருந்ததோடு சுத்தமில்லாத உணவை விற்பனைக்கு வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
அந்த உணவகத்துக்கு நார்த் பிரிட்ஜ் ரோட்டிலும் ஒரு கிளை உண்டு.
தொடர்புடைய செய்திகள்
“உணவைத் தயாரிப்பதில் இருந்து விநியோகம் செய்வது வரையிலான தொடர்செயல்களில் எந்தச் சூழலிலும் உணவு கெட்டுப்போகக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அதனைப் பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது எல்லாரும் இணைந்து ஈடுபடக்கூடிய பொறுப்பு.
“விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய சிங்கப்பூர் உணவு அமைப்பு விழிப்புடன் பணியாற்றுவதைத் தொடரும் அதேவேளை உணவகத்தினரும் பயனீட்டாளர்களும் தங்களது பங்கைச் செய்ய வேண்டும்,” என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
உணவை ஆரோக்கியமானதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்குத் தேவையான விதிகளை உணவக உரிமையாளர்கள் கடைப்பிடிப்பதோடு தங்களது வளாகங்களை சுத்தமாக, முறையான பராமரிப்பில் வைத்திருக்கவும் வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

