உயிர்மாய்ப்பு 23 ஆண்டுகள் இல்லாத அளவு குறைந்தது

உயிர்மாய்ப்பு 23 ஆண்டுகள் இல்லாத அளவு குறைந்தது

2 mins read
f4868494-6a5a-4916-9a35-db6d8004c538
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு மொத்தம் 322 பேர் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

அந்த எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டு பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 32.4 விழுக்காடு குறைவு. மேலும், 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்ற ஆண்டுதான் எண்ணிக்கை ஆகக் குறைவாகப் பதிவானது.

அதோடு, முதன்முறையாக அனைத்து வயதுப் பிரிவுகளிலும் எண்ணிக்கை குறைந்தது. உயிரை மாய்த்துக்கொள்வதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடும் நன்கொடை அமைப்பான செமரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 12) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

2022ஆம் ஆண்டில் 476 பேர் உயிரை மாய்த்துக்கொண்டனர். அந்த எண்ணிக்கை, 2000ஆம் ஆண்டில் செமரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் இதன் தொடர்பிலான புள்ளி விவரங்களைக் கணக்கிடத் தொடங்கிய பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.

அதனைத் தொடர்ந்து சென்ற ஆண்டு பதிவான எண்ணிக்கை 23 ஆண்டுகளில் காணப்படாத அளவில் குறைவாகப் பதிவானது.

சென்ற ஆண்டு உயிரை மாய்த்துகொண்டோரில் 222 பேர் ஆண்கள். அது, மொத்த எண்ணிக்கையில் 69 விழுக்காடாகும்.

சென்ற ஆண்டு ஒவ்வொரு 100,000 வாசிகளிலும் சுமார் அறுவர் உயிரை மாய்த்துக்கொண்டனர். 2022ல் அந்த எண்ணிக்கை 100,000ல் ஒன்பதாக இருந்தது.

2023ல், 20லிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் ஆக அதிக விகிதத்தில் உயிரை மாய்த்துக்கொண்டனர் என்று செமரிட்டன்ஸ் அமைப்பு தெரிவித்தது. சென்ற ஆண்டு உயிரை மாய்த்துக்கொண்டோரில் 17.7 விழுக்காட்டினர் அந்த வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, இறந்துபோன 10இலிருந்து 29 வயதுக்கு உட்பட்டவரகளில் ஆக அதிகமானோர் உயிரை மாய்த்துக்கொண்டனர். அதேவேளை, அந்த வயதுப் பிரிவினரிடையே உயிரை மாய்த்துக்கொண்டோர் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு பதிவானதுடன் ஒப்பிடுகையில் 31.2 விழுக்காடு குறைந்தது.

வலுவான தொடர்புகளைக் கொண்ட குடும்பங்களையும் சமூகங்களையும் உருவாக்குவதன் மூலம் தக்க நேரத்தில் ஆதரவு வழங்கி இளையர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சாத்தியத்தைக் குறைக்க முடியும் என்று செமரிட்டன்ஸ் அமைப்பு குறிப்பிட்டது.

13 வயது அல்லது அதையும் தாண்டியோருக்கென அந்த அமைப்பு, சென்ற ஆண்டு புதிய திட்டத்தைத் தொடங்கியது. மைண்ட்ஃபுல் பைட்ஸ் என்றழைக்கப்படும் அத்திட்டத்தின்கீழ், உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடிய அறிகுறிகளை வெளிப்படுத்துவோருடன் இணையம்வழி பாதுகாப்பான முறையில் பேசும் உத்தி இளையர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. மேலும், உயிரை மாய்த்துக்கொள்வதைப் பற்றிப் பேசும்போது எப்படி சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்பதையும் இளையர்கள் கற்றுக்கொள்வர்.

குறிப்புச் சொற்கள்