சிவந்த வானத்தில் சூரிய உதயம் ஒருபுறம், வண்ணமயமாக ஒளிரும் ராஜகோபுரம் ஒருபுறம், ‘ஓம் நமசிவாய’ முழக்கம் எழுப்பும் மக்கள் வெள்ளம் ஒருபுறம் என சிலிர்ப்பான காட்சிகளுடன் நடந்தேறியது காமன்வெல்த் டிரைவ் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா.
ஜுலை 12ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கே மங்கள இசை முழங்க வழிபாடுகள் தொடங்கின. காலை 5.45 மணியளவில் தீபாராதனை செய்யப்பட்டு, கடப்புறப்பாடு தொடங்கியது. சரியாக 6.45 மணிக்கு 43 சிவாச்சாரியார்களின் வேத முழக்கங்களுடன் குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவரது துணைவியார் ஜேன் இத்தோகி, கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இந்நிகழ்வில் தீவெங்கிலும் இருந்து ஏறத்தாழ 6,000 பக்தர்கள் பங்கேற்றனர்.
சிங்கப்பூரின் 27 கோயில்களிலிருந்தும், பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலிலிருந்தும் பேராளர்கள் அவரவர்களின் கோவில் வழக்கத்துக்கேற்ப சிறப்பு வரிசைத் தட்டுகளுடன் ஸ்ரீ முனீஸ்வரனுக்கு மரியாதை செலுத்தினர். கோயிலின் தலைவர் ரெத்தினம் செல்வராஜு அனைவருக்கும் பதில் மரியாதை செய்தார்.
நெரிசலைத் தவிர்க்க அதிகாலை சாலையின் இருபுறமும் வாகனப் போக்குவரத்து நிறுத்தபட்டது. எம்ஆர்டி நிலையம் பேருந்து நிலையங்கலுக்குச் செல்லும் நடைபாதைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
கோயிலுக்கு வெளியில் பக்தர்கள் அமர்ந்து குடமுழுக்கைக் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளே நடப்பவற்றைக் காண இரு பெரிய திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
ஏறத்தாழ 800 தொண்டூழியர்கள் கவனிப்பில் ஈடுபட்டனர். குடமுழுக்குத் தீர்த்தம், குங்குமப் பிரசாதம் அடங்கிய பைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
ஏறத்தாழ 10,000 பக்தர்களுக்கு அன்னதான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஜூலை 11 நள்ளிரவிலிருந்தே தயார்செய்யப்பட்ட உணவு, வெள்ளிக்கிழமை அதிகாலை இக்கோயிலுக்கு தருவிக்கப்பட்டது. உணவுக்கூடத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் அமர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“திட்டமிட்டபடி சரியான நேரத்தில் தடைகளின்றி நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி,” என்றார் கோயிலின் தலைவர் ரெத்தினம் செல்வராஜு. தனது தலைமையிலான முதல் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது மனநிறைவு அளிக்கிறது என்றும் சொன்னார்.
“நிர்வாகக்குழு, தொண்டூழியர்களின் ஆதரவின்றி இது சாத்தியமாகி இருக்காது,” என்று சொன்ன அவர், பக்தர்களுக்குச் சிரமமின்றி தெய்வீகமான அனுபவத்தைத் தர உழைத்த அனைவர்க்கும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.