பாசிர் ரிஸ்ஸில் உள்ள போக்குவரத்துச் சந்திப்பில் கவனக்குறைவாக வேனை ஓட்டி, பாதசாரி ஒருவருக்கு மரணத்தை விளைவித்த 61 வயது டான் சீசேவுக்கு வெள்ளிக்கிழமையன்று 10 மாத, நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், சிங்கப்பூரரான டானுக்கு எட்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டது.
உரிய கவனமின்றி வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததாகச் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் டான்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார், விபத்து ஏற்படுத்திவிட்டு வாகனத்தை நிறுத்த தவறியது, உதவி செய்யத் தவறியது ஆகிய குற்றச்சாட்டும் தண்டனை விதிக்கும்போது கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.
இந்த விபத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அன்று காலை 6 மணிக்கு லோயாங் அவென்யூ நோக்கிச் செல்லும் பாசி ரிஸ் டிரைவ் 1 சந்திப்பில் டான் ஓட்டிய வேன் நின்றதாகவும் பாசிர் ரிஸ் டிரைவ் 6க்குச் செல்வதற்காக வேனை இடப்புறமாக அவர் திருப்பியதாகவும் கூறப்பட்டது.
அப்பாதையைக் கடப்பதற்காக அங்கு நின்றிருந்த பாதசாரியான 68 வயது ஓங் சியாங் ஹுவாட், பாதசாரிகள் பாதையைக் கடப்பதற்கான பச்சை விளக்குச் சமிச்ஞை வந்தவுடன் சாலைக் கடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அப்பாதையில் வந்த டேனின் வேன் ஓங்மீது மோதியது.
வேன் மோதிய வேகத்தில் பின்புறமாக ஓங் விழுந்தார். டான் தனது வாகனத்தை நிறுத்துவதற்கு முன் ஓங்கின் உடலை சிறிது தூரம் இழுத்து சென்றதாகவும் பின்னர் அவர்மீது வேனை ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றதாகவும் சொல்லப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓங், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற டானை அன்றே காவல்துறையினர் கைது செய்தனர்.

