தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நுழைவுச்சீட்டுகள் விற்பனைக்கு அல்ல: தேசிய தின அணிவகுப்பு 2024ன் ஏற்பாட்டுக் குழு எச்சரிக்கை

2 mins read
8351544d-517f-4ba8-a916-d5d938c264ec
இணைய விற்பனைத் தளங்களில் தேசிய தின அணிவகுப்பு 2024க்கான நுழைவுச்சீட்டுகள் ஒவ்வொன்றும் $100 வரை விற்கப்பட்டதை நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு கண்டறிந்தது. - படங்கள்: ஃபேஸ்புக், கரோசல்

தேசிய தின அணிவகுப்பு 2024, அதன் முன்னோட்ட நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் கண்டிப்பாக விற்பனைக்கு அல்ல என வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 12) தேசிய தின அணிவகுப்பு 2024ன் ஏற்பாட்டுக் குழு பொதுமக்களை எச்சரித்தது.

மேலும், இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை மற்றவருடன் பரிமாற்றம் செய்துகொள்ள கூடாது என்றும் அது தெரிவித்தது.

இணைய விற்பனைத் தளங்களில் தேசிய தின அணிவகுப்பு 2024க்கான நுழைவுச்சீட்டுகள் ஒவ்வொன்றும் $100 வரை விற்கப்பட்டதை நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு கண்டறிந்தது. அதனைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கையைப் பொதுமக்களுக்கு அது விடுத்தது.

“இணைய விற்பனைத் தளங்களில் தேசிய தின அணிவகுப்புக்கான நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றன என்னும் தகவல் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது,” என தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகத் தளங்களில் இருக்கும் அதன் அதிகாரபூர்வ கணக்குகளின் மூலம் தெரிவித்தது.

மேலும் அந்தப் பதிவுகளில், இணையத்தில் விற்கப்படும் நுழைவுச்சீட்டுகளை வாங்கும் பொதுமக்களைக் குழு எச்சரித்ததோடு மட்டுமல்லாமல் அணிவகுப்புக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற விருப்பமுள்ள பொதுமக்கள் அதற்காக நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கவும் அது ஊக்குவித்தது.

நுழைவுச்சீட்டு மட்டுமல்லாமல் வேறு பிற பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பும் அவர்கள் பெற முடியும் என்றும் அது தெரிவித்தது.

“தேசிய தின நுழைவுச்சீட்டுகளை விற்பனை மற்றும் சட்டவிரோதமாக விநியோகம் செய்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு வழங்கப்படும் சலுகையைப் பணமாக்குவது நிகழ்வின் கொண்டாட்ட உணர்விற்கு எதிரானது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எதிர்காலத்தில் தேசிய தின அணிவகுப்பு நுழைவுச்சீட்டுகளுக்காக நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும்,” என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

மேலும், தேசிய தின நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் வரிசை எண்களுடன் வழங்கப்படுவதாகவும் அவற்றைப் பெறுபவர்களை எளிதில் கண்டறிய முடியும் என்றும் அது சொன்னது.

நுழைவுச் சீட்டுகள் உண்மையானதா என்பதை உறுதிசெய்ய தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்கான நுழைவு வாயிலில் சோதனை நடத்தப்படும் எனவும் நுழைவுச்சீட்டுகள் விற்பனை குறித்த விளம்பரங்களை இணைய விற்பனைத் தளங்களில் இருந்து அகற்ற அத்தளங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்