ஜூலை 1ஆம் தேதிக்கும் ஜூலை 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் ஓட்டிகளிடம் நிலுவையில் இருந்த அபராதத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டனர்.
அவர்களுடன் இணைந்து குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், வீடமைப்பு வளர்ச்சி கழகம், நிலப் போக்குவரத்து ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின்போது, உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச்சாவடிகள் மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனமோட்டிகள் சோதனைச்சாவடிகளில் நிறுத்தப்பட்டனர்.
வாகன, போக்குவரத்து விதிமீறல்களின் அடிப்படையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் 188 வெளிநாட்டு வாகனமோட்டிகளிடம் இருந்து போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கிட்டத்தட்ட S$460,000க்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டது.
“சிங்கப்பூரில் போக்குவரத்துக் குற்றங்கள் செய்துவிட்டு, அதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தாத வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு எதிராக சிங்கப்பூர் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்,” என்று ஆணையங்கள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
நிலுவையில் உள்ள அபராதங்களைச் செலுத்தத் தவறும் வெளிநாட்டு வாகனமோட்டிகள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டது.
அனைத்து வாகனமோட்டிகளும் சிங்கப்பூரின் போக்குவரத்துச் சட்டத்தைக் கடைப்பிடிக்குமாறு ஆணையங்கள் அறிவுறுத்தின.

