உறவிற்கு உரமிட்டால் எட்டலாம் புதிய உயரம்

உறவிற்கு உரமிட்டால் எட்டலாம் புதிய உயரம்

3 mins read
03c00d8d-f3fa-48e6-bfba-4fdafe55d886
படம்: - தமிழ் முரசு

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது யாவரும் அறிந்த தொன்மொழி.

உலகமயமும் தாராளமயமும் பெருகி, உலகமே திறந்த சந்தையாக விளங்கும் இன்றைய சூழலில், நாடுகளும் வட்டாரங்களும் கூட்டாகச் செயல்படுவது தொடர்புடைய எல்லாத் தரப்புகளுக்கும் பயனளிக்கும்.

அதிலும், பொருளியல் சார்ந்து மட்டுமின்றி, இன, பண்பாடு, மரபு சார்ந்து நீண்டகால உறவுகொண்டுள்ள இரு நாடுகள், அவ்வுறவைப் பேணி வளர்த்தால் விளையும் நன்மைகள் ஏராளம்.

அவ்வகையிலானதுதான் சிங்கப்பூர் - இந்தியா உறவு. 

எப்போதும் நல்லுறவுடன் கைகோத்து நடைபோடும் அந்நாடுகள், நெருக்கடிக் காலங்களிலும் ஒன்றுக்கொன்று ஆதரவாக விளங்கி வருகின்றன.

கொவிட்-19 தொற்றுப் பரவல் உச்சத்தில் இருந்தபோது, உயிர்வளிக் கலன்கள், செறிவூட்டிகள் உள்ளிட்ட கருவிகளை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தது சிங்கப்பூரின் தெமாசெக் அறநிறுவனம்.

சென்ற ஆண்டு உள்நாட்டில் போதிய கையிருப்பை உறுதிசெய்து, விலையேற்றத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் பாசுமதி தவிர்த்த அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்தது.

இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவைச் சுட்டி, தனக்கு அத்தடையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற சிங்கப்பூரின் கோரிக்கைக்கு இணங்கிய இந்தியா, அந்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்குத் தடையின்றி அரிசி ஏற்றுமதி செய்ய இசைவளித்தது நினைவுகூரத்தக்கது.

தென்கிழக்காசிய நாடுகளில், இந்தியாவின் ஆகப்பெரிய வணிகப் பங்காளியாகத் திகழ்ந்து வருவதும் சிங்கப்பூர்தான்.

இப்படி ஒரு நன்னிலையில் இருந்துவரும் சிங்கப்பூர் - இந்தியா உறவு மேலும் வலுப்பெற்று, பல துறைகளிலும் ஒத்துழைப்பு மேம்படும் என்று எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் தெரிவித்திருக்கிறார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.

கடந்த வாரம் தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் 20ஆம் ஆண்டு நிறைவுவிழா இரவு விருந்தில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றிய அதிபர், இந்தியாவும் தென்கிழக்காசியாவும் இணைந்து செயல்பட்டு வருவது, இரு வட்டாரங்களுக்கு மட்டுமின்றி, உலகிற்கே நன்மை பயக்கும் எனக் குறிப்பிட்டார்.

இருவட்டாரங்களும் புவிசார் அரசியல் பெரும்பதற்ற நிலைகள் எதிலும் சிக்கிக்கொள்ளவில்லை; அவை தொடர்பில் எத்தரப்பிற்கும் ஆதரவான நிலைப்பாட்டையும் கைக்கொள்ளவில்லை.

அத்துடன், வாழ்க்கையில் மேம்பட்ட நிலையை எட்ட முடியும் என்ற நம்பிக்கையுடைய சமுதாயங்களை அவை கொண்டுள்ளன. இன்றைய சூழலில் இது அரிதான ஒன்று என்கிறார் அதிபர்.

இந்தியாவும் தென்கிழக்காசியாவும் சேர்ந்து, உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. உலகப் பொருளியலில் அவற்றின் பங்கு 15 விழுக்காடு. உலகில் விரைந்த வளர்ச்சியைக் கொண்டிருக்கும் வட்டாரங்களும் அவைதான்.

இப்படிச் சாதகநிலைகள் பல இருக்கும் நிலையில், இருவட்டாரங்களும் அடுத்த பத்தாண்டுக் காலத்தில் அந்நிலைகளை மேலும் வலுப்படுத்தி, பயனடைய வேண்டும் என்று திரு தர்மன் வலியுறுத்தியிருக்கிறார்.

வெளிநாட்டு நலன்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டும் தொழிற்கொள்கைகள் அதிகரித்துவரும் சூழலில், அதனை எதிர்கொண்டு வெற்றிநடைபோட மூன்று வழிமுறைகளையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

ஒவ்வொரு நாடும் தனது செயல்திறன்களை மேம்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்துவது, அரசாங்கம், தொழிற்சங்கங்கள், சமூகக் குழுக்கள், பயிற்சி நிலையங்கள் போன்றவற்றுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது, பருவநிலை மாற்றம் போன்ற சிக்கலான உலக விவகாரங்களுக்குத்  தீர்வுகாண இந்தியாவும் தென்கிழக்காசியாவும் பொறுப்பான மற்ற பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவது என்பனவே அப்பரிந்துரைகள்.

அதற்கேற்ப, வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரும் இந்தியாவும் தங்களது இருதரப்பு உறவுகளைப் பல்வேறு நிலைகளிலும் துறைகளிலும் வலுப்படுத்த முடியும் என்பது அதிபர் தர்மனின் உறுதியான நம்பிக்கை.

அந்த ஆழ்ந்த, நீடித்த நல்லுறவு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் என்பது அவரது எதிர்பார்ப்பு.

நிச்சயமற்ற சூழல் நிலவும் உலகில், ஆகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் சிறுநாடெனினும் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழும் சிங்கப்பூரும் தொடர்ந்து ஒன்றுக்கொன்று கைகோத்து, தங்களுக்கு இடையிலான நெருக்கத்தையும் ஒத்துழைப்பையும் இணைந்து வலுப்படுத்தி  நடைபோட்டால் இருதரப்பிற்கும் பெரும்பயன் விளையும் என்பது திண்ணம்.

குறிப்புச் சொற்கள்