வளர்ப்புப் பெற்றோரால் வளர்க்கப்படும் இளையர்கள் பிறகு சொந்தமாக வாழ கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பிரிவைச் சேர்ந்த 17 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டோருக்கு நிதி உதவி உட்பட கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்று ஜூலை 13ஆம் தேதியன்று அமைச்சு கூறியது.
அதை அவர்கள் வசிப்பிடம், அன்றாடச் செலவுகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
வளர்ப்புப் பெற்றோர் ஏற்பாட்டுத் திட்டத்தின்கீழ் வளர்க்கப்படுபவர் 21 வயதை எட்டும்போது இத்திட்டத்திலிருந்து வெளியே வருகின்றனர்.
சிறுவர் இல்லத்தில் தங்குபவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
வளர்ப்புப் பெற்றோர் ஏற்பாட்டுத் திட்டம் தற்காலிகமானது என்றும் அதற்கு உட்படும் சிறுவர்கள் தங்கள் சொந்த குடும்பத்துடன் மீண்டும் இணைவதே இலக்கு என்று தெரிவிக்கப்பட்டது.
சொந்த குடும்பத்துடன் மீண்டும் இணைந்து வாழ்வது அனைவருக்கும் சாத்தியமாகாது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் திரு எரிக் சுவா தெரிவித்தார்.
பெற்றோர் மாண்டிருக்கக்கூடும், மனநோயாளிகளாக இருக்கக்கூடும், நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“வளர்ப்புப் பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அல்லது சிறுவர் இல்லத்திலிருந்து வெளியே வந்த பிறகு சுயமாக வாழும் கட்டாயம் அவர்களுக்கு ஏற்படக்கூடும். இதன் காரணமாக அவர்கள் கல்வியைத் தொடராமல் பணிபுரியக்கூடும். அவ்வாறு செய்வதால் நல்ல வேலையில் சேரத் தேவையான ஆற்றலை அவர்கள் பெறாமல் போகலாம்,” என்று ஜூலை 13ஆம் தேதியன்று திரு சுவா தெரிவித்தார்.
சன்டெக் மாநாடு, கண்காட்சி மையத்தில் நடைபெற்ற வளர்ப்புப் பெற்றோர் பொது வரவேற்பு தின நிகழ்வில் அவர் பேசினார்.
வளர்ப்புப் பெற்றோர் ஏற்பாட்டுத் திட்டத்தில் ஈடுபடும் வளர்ப்புப் பெற்றோரும் சிறுவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பொதுமக்களிடம் பகிர்ந்துகொண்டனர்.
மேம்படுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் வளர்ப்புப் பெற்றோரால் வளர்க்கப்படும் சிறுவர்களுக்குப் பராமரிப்புக்குப் பிந்திய ஆலோசகர்கள் உதவுவர்.
சுயமாக வாழ சம்பந்தப்பட்ட சிறுவர்களை அவர்கள் தயார்ப்படுத்துவர்.
வாழ்க்கைத் தொழில், கல்வி, நிதி, வசிப்பிடம் போன்றவை குறித்து அச்சிறுவர்களுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கி அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பர்.
முழுநேரக் கல்வி, பயிற்சி, வேலை அனுபவப் பயிற்சி, தேசிய சேவை ஆகியவற்றில் இருப்பவர்களுக்கு இந்தத் திட்டம் வழங்கப்படுகிறது.
அவர்கள் கல்வியை முடிக்கும் வரை அல்லது முழுநேர வேலையில் சேரும் வரை இத்திட்டம் மூலம் அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.