நாடு முழுவதும் பிரதமர் வோங் தொகுதி வருகை

நாடு முழுவதும் பிரதமர் வோங் தொகுதி வருகை

3 mins read
8908c054-1fb6-4ae9-b318-24bb1c7d5108
மக்கள் கழக குடும்ப விளையாட்டு மைதான நிகழ்ச்சி வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றத்தில் சனிக்கிழமை (ஜூலை 13ஆம் தேதி) அன்று நடைபெற்றது. அதில் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், தேசிய வளர்ச்சி, சமுதாய சேவை பொறுப்பு அமைச்சருமான டெஸ்மண்ட் லீயும் கலந்துகொண்டு பொதுமக்களுடன் படமெடுத்துக் கொண்டனர். - படம்: எஸ்பிஎச்

திரு டான் வெய் ஹோங்கின் குடும்பம் பரந்து விரிந்த ஒன்று.

இதனால் வாரயிறுதி குடும்ப நேரம் என்பது வெஸ்ட் கோஸ்ட்டின் பல பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான 54 தாய்வழி வந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடும் நேரம்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை (ஜூலை 13ஆம் தேதி) அன்று மக்கள் கழகத்தால் வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றத்தில் குடும்ப விளையாட்டு மைதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த, இரண்டு வயதிலிருந்து 91 வயது வரையிலான, 22 டான் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் குறைந்தது 1,000 குடும்பங்களைச் சேர்ந்த மற்றவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்களில் பலர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்தக் கொண்டாட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான டெஸ்மண்ட் லீ, ஆங் வெய் நெங், ரேச்சல் ஓங், ஃபூ மீ ஹார் ஆகியோருடன் பைனியர் தொகுதி உறுப்பினரான பேட்ரிக் டேயும் கலந்துகொண்டார்.

திரு வோங் தான் பிரதமராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் கடந்த ஜூன் மாதம் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் உலா மேற்கொண்டார். அப்பொழுது தான் நாட்டின் மற்ற தொகுதிகளையும் சுற்றிப் பார்க்கப்போவதாகவும் முடிந்த அளவு சிங்கப்பூரர்களை சந்திக்கப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

சனிக்கிழமை வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் உரையாற்றிய பிரதமர், தான் 2011ஆம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்தபோது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

பிரதமர் லாரன்ஸ் வோங், 2011ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரை பூன் லே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்று திரு வோங் விளக்கினார். இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் எது சிறப்பு சேர்க்கிறது என்றால் அது தொடர்பாக அங்கு வசிப்போர், அவர்களது குடும்பத்தார், அன்புக்குரியவர்கள் ஆகியோரிடம் குடிகொண்டிருக்கும் இனிய நினைவலைகள் என்று பிரதமர் கூறினார்.

“சிங்கப்பூரை அனைவருக்கும் மேலும் சிறப்பான இருப்பிடமாக உருவாக்க உங்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். உங்களுக்காக மட்டுமல்ல, உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்காகவும்,” என்று அவர் சொன்னார்.

இதனால்தான் தான் குடியரசின் வெவ்வேறு வட்டாரங்களுக்குச் சென்று குடிமக்களின் கருத்துகள், யோசனைகளைக் கேட்கப் போவதாக பிரதமர் தெளிவுபடுத்தினார்.

இதன்மூலம், சிங்கப்பூரர்களுக்கு இந்த நாடு தங்கள் சொந்த நாடு என்ற உணர்வுடன் தொடர்ந்து இதை அனைவருக்கும் மேலும் சிறப்பான நாடாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஊட்ட வேண்டும் என்றார். இதை அடுத்த கட்ட நாட்டு நிர்மாணத்தில் செய்ய வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.

பின்னர் திரு வோங், தேசிய வளர்ச்சி அமைச்சருமான திரு லீயுடன் வெஸ்ட் கோஸ்ட் உணவு நிலையத்துக்கும் சென்றார். அங்கு அவர் உணவு அருந்துவோருடனும் உணவு அங்காடிக் கடைக்காரர்களுடனும் கலந்துரையாடினார்.

குறிப்புச் சொற்கள்