சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளை நிர்வகிப்பது என்பது புதிய மருத்துவமனைகளைக் கட்டுவது மட்டுமல்ல, தேவையான சிகிச்சையை வழங்கும் ஒழுங்குமுறையின் வழியாகவும் சாதிக்க முடியும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெற்ற ‘உட்லண்ட்ஸ் ஹெல்த்’ மருத்துவமனையின் அதிகாரத்துவத் திறப்பு நிகழ்வில் பங்கேற்றுப் பேசுகையில் அவர் இதனைக் கூறினார். இது பத்தாண்டுகளில் திறக்கப்பட்ட மூன்றாவது புதிய பொது மருத்துவமனை ஆகும்.
திரு லீ தமது உரையில், “விரைவாக மூப்படைந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய மருத்துவமனைகளைக் கட்டிக்கொண்டே போக முடியாது.
“தேவைக்கு அதிகமான சிகிச்சைகளையும் மருந்துகளையும் வழங்காமல் இருக்கும் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம். அதேபோல, புதிய மருத்துவ சிகிச்சைமுறைகள், நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதிலும் மருந்துகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதிலும் பாரபட்சம் கூடாது,” என்று குறிப்பிட்டார்.
அத்துடன், சுகாதாரப் பராமரிப்பு முறையை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வழிகளையும் திரு லீ விளக்கினார்.
“அரசாங்கம் வழங்கும் உதவிகள், மருத்துவக் காப்பீடு, தனிப்பட்டோர் வழங்கும் இணைத்தொகை ஆகியவற்றைச் சரிவர நிர்வகிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தவறான, பிழையான ஊக்கத்தொகைகள் வழங்கப்படுவதைக் குறைக்க இயலும்.
“இன்னும் அதிகமான ஆற்றல்மிக்க மருத்துவர்கள், தாதியர், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் ஆகியோருக்கு சிங்கப்பூர் தொடர்ந்து பயிற்சி அளிக்கும். அத்துடன், சுகாதாரப் பராமரிப்பு வசதிகளும் உள்கட்டமைப்பும் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
“அதேநேரம், சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான, உயர்தர சுகாதாரப் பராமரிப்பை தொடர்ந்து வழங்கும்போது சில கடினமான முடிவுகளும் தேவைப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“சுகாதாரப் பராமரிப்பு முறைகளில் தொய்வு ஏற்படுவதைக் காட்டும் ஏராளமான உதாரணங்கள் எங்கும் உள்ளன. தரக்குறைவான சுகாதாரப் பராமரிப்பு, நீண்டகாலக் காத்திருப்பு, அதிகப்படியான மருத்துவக் கட்டணங்கள் மற்றும் அதிகமான காப்பீட்டுத் தொகைகள் ஆகியவற்றால் மக்கள்தொகை பாதிப்புறும்.
“அதன் விளைவாக மக்களின் சுகாதாரமும் வாழ்க்கைத்தரமும் மோசமடையும். வாழ்நாள்கூட பாதிக்கப்படும்,” என்றார் திரு லீ.
அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் பற்றி சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் தெரிவித்து இருந்தார்.
காப்பீட்டுத் தொகை மூலம் சரிக்கட்டலாம் என்ற நோக்கத்தில் செலவுமிகுந்த சிகிச்சைகளை நோயாளிகள் தேர்ந்து எடுக்கும் போக்கைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் சுகாதார அமைச்சுக்கு இருப்பதாக வெள்ளிக்கிழமை அவர் கூறி இருந்தார்.

