தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$3 பில்லியன் பணமோசடி: முதலாளி பற்றித் தெரிவித்த முன்னாள் ஊழியர்

3 mins read
10862348-50a3-4b6a-8b54-5af1d947c07c
ஜாலான் அசுஹானில் உள்ள சு பிங்காயின் வீட்டில் ஆர்கேட் விளையாட்டு இயந்திரங்கள், ஒரு பிரத்யேக அறை, 10 பெரிய பெட்டகங்கள் ஆகியவை உள்ளன. - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய பணமோசடி விவகாரமாகக் கருதப்படும் $3 பில்லியன் பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 9 பேர் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.

இவ்விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 16 பேரின் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

அவர்களில் ஒருவரான தொழிலதிபர் சு பிங்காயின் முன்னாள் ஊழியரான டேவ் (உண்மையான பெயர் அல்ல) காவல்துறைக்கு இந்த வழக்கு விசாரணையில் உதவி வருகிறார்.

காவல்துறையினரால் தேடப்படும் நபராக சு அறிவிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரைவிட்டு அவரும் அவரது குடும்பமும் தப்பியோடினர். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட 3 பில்லியன் டாலரில் 2.1 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரர்கள் என்று கூறப்படும் 17 பேரில் சுவும் ஒருவர்.

சுவின் முன்னாள் ஊழியரான டேவ்வை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டு, சு உடைய செல்வச் செழிப்பான வாழ்க்கை முறையையும் சிங்கப்பூரில் அவருடைய கடைசி நிமிடங்கள் குறித்தும் கேட்டறிந்தது.

கம்போடிய குடியுரிமை பெற்றவரான திரு சு, வனுவாட்டு, செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளைக் கொண்டவர் என்றும் ஒரு தொழிலதிபர் எனத் தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொள்வார் என்றும் திரு டேவ் கூறினார்.

மென்பொருள் செயலிகளை உருவாக்கும் நிறுவனமான நியூ ஃபியூச்சர் ஹோல்டிங்ஸ் உட்பட ஆறு நிறுவனங்களில் அவர் இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நியூ ஃபியூச்சர் இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்தை சு நிறுவியதாகவும்அங்கு அவருக்குச் சொந்தமாக வீடு ஒன்று இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் உடற்குறையுள்ளோர் விளையாட்டு மன்றத்தின் சார்பில் 2022ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கோல்ஃப் விளையாட்டு நிகழ்வுக்கு நன்கொடை அளித்தார் என்றும் சிறந்த நன்கொடையாளராக ஒரு நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டார் என்றும் திரு டேவ் சொன்னார்.

“அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் சிறந்த சீன உணவகங்களில் உணவு உண்பர். பெரும்பாலும் உணவு உண்பதற்குத் தனிப்பட்ட அறைகளையே விரும்புவர். சுவும் அவரது மனைவியும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் செஞ்சுரியன் கார்டுகளை வைத்திருந்தாலும் அவர் உணவகங்களில் ரொக்கப்பணம் மூலம் கட்டணம் செலுத்துவார்,” என்றார் திரு டேவ்.

தனது சட்டைப் பைகளில் சு, $100 பணக்கட்டுகளை வைத்திருப்பார் என்றார் திரு டேவ்.

“அவர் ஒன்பது ஆடம்பர கார்கள் வைத்திருந்தார். அவற்றில் இரண்டு ஃபெராரிகள், ஓர் நீல நிற எஃப்8 ஸ்டிரடேல் ரக கார், இரண்டு ரோல்ஸ் - ராய்ஸ் கார்கள், ஓர் கருப்பு ஃபாண்டோம் ஆகியவை அடங்கும்,” என்றார் அவர்.

“சிங்கப்பூரில் அவரும் அவரது குடும்பமும் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருந்தபோதும் நான் என் முதலாளி பணி செய்வதை ஓர் நாள் கூட பார்த்ததில்லை,” என்றார் 2023ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சுவிடம் பணியில் சேர்ந்த திரு டேவ்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

எனது முதலாளி சோதனை நடந்த நாளில் சு ஜியான்ஃபெங்கின் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய அவரது வீட்டைக் கடந்து செல்லும் சாலைவழி வாகனத்தை ஓட்டும்படி ஓட்டுநர்களில் ஒருவருக்கு அறிவுறுத்தியதாக மற்றொரு ஊழியர் என்னிடம் கூறியதாக அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

சு ஜியான்ஃபெங்கின் வீட்டில் நடந்ததை அறிந்த சு, வீடு திரும்பியதுடன் தனது உடைமைகளை எடுத்துகொண்டு சிங்கப்பூரைவிட்டு சென்றதாகவும் அவர் வெளியேறிய பிறகு தரையில் 20 முதல் 30 காலியான ‘படேக் பிலிப்’ கைக்கடிகாரப் பெட்டிகள் இருந்ததாகவும் அவர் சொன்னார்.

“சிங்கப்பூரை விட்டு தப்பியோடிய அவரும் அவரது மனைவியும் வெளிநாட்டிலிருந்து ஊழியர்களைத் தொடர்புகொண்டு எங்களுக்கும் இந்த மோசடிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. அனைத்தும் விரைவில் சரியாகிவிடும்,” எனச் சொல்ல முயன்றதாக திரு டேவ் கூறினார்.

அவர்கள் எந்த நாட்டிலிருந்து அழைக்கிறார்கள் என்று தங்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்