‘எச்பிவி’க்கு எதிரான தடுப்பூசி போட ஆண்களுக்குப் பரிந்துரை

1 mins read
c14581f9-2d7f-488e-a818-d1324a29df00
பெண்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு வந்த தடுப்பூசி தற்போது ஆண்களுக்கும் தேவை என்று மருத்துவர் குழு கூறியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் மருத்துவர்கள் குழு ஒன்று, எச்பிவி (ஹுயுமன் பாப்பில்லோமோ வைரஸ்) கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை இங்குள்ள ஆண்களும் போட்டுக்கொள்ளுமாறு பரிந்துரைத்து உள்ளது.

அத்தகைய தடுப்பூசி தற்போதுவரை பெண்களுக்கும் சிறுமியருக்கும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, ஆண்கள் சுகாதாரச் சங்கம் (சிங்கப்பூர்) ஜூன் 29ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இங்குள்ள ஆண்களிடம் குறிப்பிடத்தக்க சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியதாக எச்பிவி தொற்று விளங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்தத் தொற்று ஆண்குறி, குதம் மற்றும் தொண்டைப் பகுதிகளில் புற்றுநோயையும் பிறப்புறுப்பு மருக்களையும் ஏற்படுத்திய சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதை அது சுட்டிக்காட்டி உள்ளது.

எச்பிவி தொடர்பான நோய்களைக் கண்டறிந்து தடுக்க, சிங்கப்பூர் ஆண்களுக்குரிய வழக்கமான பரிசோதனை எதுவும் இதுவரை இல்லை.

எச்பிவி தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களிடம் மறுதொற்றை எதிர்க்கும் ஆற்றல் இருக்காது என்று குறிப்பிட்டுள்ள அந்த லாப நோக்கமற்ற சங்கம், ஆண்களின் சுகாதாரம் தொடர்பிலான அதிக விழிப்புணர்வும் கொள்கை மேம்பாடுகளும் தேவை என்று தெரிவித்து உள்ளது.

எச்பிவி என்பது பாலியல் செய்கைகளால் தொற்றக்கூடிய ஒருவகை கிருமித் தொகுப்பு. ஏறத்தாழ இருபது வகைக் கிருமிகள் அதில் அடங்கும்.

வழக்கமாக, அந்தத் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறி காணப்படுவதில்லை. சிகிச்சை இன்றி தாமாகவே மறைந்துவிடக்கூடிய தன்மையும் அதற்கு உண்டு.

இருப்பினும், பிறப்புறுப்பில் தொற்றும் சில வகை எச்பிவி கிருமிகளால் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படவும் சாத்தியம் உண்டு.

குறிப்புச் சொற்கள்