தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீவக வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு கருத்தடை செய்ய பரிந்துரை

2 mins read
f3f615c6-a4cc-44d1-b6bd-e3d5c2784d0b
பூனை வளர்ப்புக்கு உரிமம் பெறவேண்டும் என்ற விதிமுறை செப்டம்பர் மாதம் அறிமுகம் காண்கிறது. - படம்: எஸ்பிஎச் மீடியா

வீவக வீடுகளில் பூனைகளை வளர்ப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை செப்டம்பர் மாதம் விலக்கப்பட இருக்கும் நிலையில் வீவக வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளுக்குக் கட்டாயக் கருத்தடை செய்ய நீ சூன் குழுத்தொகுதி எம்.பி. லூயிஸ் இங் பரிந்துரைத்து உள்ளார்.

கருத்தடை செய்யப்பட்ட பூனைகள் அலறல் சத்தம் எழுப்புவதற்கான வாய்ப்பு குறைவு.

விலங்கு பாதுகாப்புக் கொள்கைகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் திரு இங் இதனைத் தெரிவித்தார். அந்தக் கருத்தரங்கு நீ சூன் ஈஸ்ட் சமூக மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெற்றது.

விலங்கு வதையைத் தடை செய்வதற்கு பலத்த ஆதரவு இருப்பது அந்தக் கருத்தரங்கில் எதிரொலித்தது.

விலங்கு வதையை இன்னும் எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்துவது என்பதற்கான விவாதத்தில் உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகத்துடன் திரு இங்கும் கலந்துகொண்டார்.

விலங்குக் கொடுமை தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ), விலங்குநல ஆராய்ச்சி மற்றும் கல்விச் சங்கம் (ஏக்கர்ஸ்) போன்றவை உள்ளிட்ட பல்வேறு விலங்கு நல்வாழ்வுக் குழுக்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டன.

அரசாங்கத்துக்கு தாம் ஒரு வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதில் சில முக்கியமான பிரச்சினைகளை எழுப்ப இருப்பதாகவும் திரு இங் கூறினார்.

விலங்கு வதைக்கு எதிரான அபராதத் தொகையை அதிகரிப்பதற்கான சட்டமாற்றங்கள் போன்றவை அவை என்றார் அவர்.

மேலும், கருத்தரங்கில் திரட்டப்பட்ட தகவல்கள் அடங்கிய விரிவான ஒன்றாக அந்த வெள்ளை அறிக்கை இருக்கும் என்றும் திரு இங் தெரிவித்தார்.

விலங்குகளின் நல்வாழ்வு தொடர்பாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர தாம் கருதி இருப்பதாகக் கூறிய திரு இங், சிங்கப்பூர் வரலாற்றில் விலங்குநலன் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட இருக்கும் முதல் தீர்மானமாக அது இருக்கும் என்றார்.

பள்ளிக்கூட பாடத்திட்டங்களில் விலங்குகளின் நல்வாழ்வு பற்றி சேர்ப்பது தொடர்பாகவும் நாய்களை வளர்ப்போர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் தாம் அதிகம் கவனம் செலுத்த இருப்பதாகவும் திரு இங் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, புறாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தங்களது குடியிருப்பாளர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் தொந்தரவை எதிர்நோக்குவதாகவும் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படாதபோது தங்களது எம்பிக்களோ நகர மன்றங்களோ போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் கருதுவதாகவும் திரு சண்முகம் தெரிவித்தார்.

“புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம் என்று போதிப்பது போன்ற நடவடிக்கைகள் பலனளிக்க நாளாகும் என்பதால் நகர மன்றங்கள் புறாக்களின் எண்ணிக்கையை நேரடி ஈடுபாட்டின் வழி குறைக்கப்போவதாக அறிவித்தன,” என்றார் திரு சண்முகம்.

குறிப்புச் சொற்கள்