சிங்கப்பூரில் அதிகப்படியான கிட்டப்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்படும் பெரியவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகச் சிங்கப்பூர் கண் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
‘மையோபியா’ எனப்படும் கிட்டப்பார்வை என்பது கண் வில்லையின் புற வளைவுப் பகுதி அதிகரிப்பதினாலும் கண்கோளம் நீட்சியுறுவதாலும் ஏற்படும் ஒரு கண் நோய்.
இதனால், கண்ணுக்குள் செல்லும் ஒளிக்கதிர்கள் தேவைக்கு அதிகமாகச் சிதறலடைந்து ஒளிக்கதிர் விழித்திரைக்கு முன்னாலேயே விழுவதால் காட்சி தெளிவற்றதாக காணப்படும்.
“மையோபியா எனும் கிட்டப்பார்வை கண்நோய் தொடர்பில் பெரிய அளவு பாதிப்பு எதையும் நம்மால் தற்போது உணர முடியாது. ஆனால், அந்தப் பிரச்சினையைக் கூடிய விரைவில் நாம் சந்திக்க நேரலாம்,” என டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் சா சியாங் மெய் கூறினார்.
“கிட்டப்பார்வை குறைபாடு சிங்கப்பூரில் அதிகரித்துவரும் மருத்துவப் பிரச்சினைகளில் ஒன்று. சிங்கப்பூரில் அடுத்த சில ஆண்டுகளில் பார்வைக் குறைபாடு அதிகரிப்பதற்கு இது முக்கியக் காரணமாக இருக்கும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
ஏனென்றால், தற்போது பெரியவர்களாக இருக்கின்றவர்கள் எதிர்காலத்தில் வயதான பெரியவர்கள் நிலைக்கு வருபவர்கள், தங்கள் குழந்தைப் பருவத்தில் அதிக வாசிப்பு, எழுதுதல், திரைக்கு முன்னால் அதிக நேரம் அமர்ந்து வேலைசெய்தல் போன்ற செயல்களில் தங்கள் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டிருப்பார்கள்.
சிங்கப்பூர் குடியிருப்பாளர்களிடையே கிட்டப்பார்வை குறைபாடு இருக்கும் இரண்டு மில்லியன் பெரியவர்களும் அதிகப்படியான கிட்டப்பார்வை குறைபாடு கொண்ட 350,000பெரியவர்களும் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் அதிகப்படியான கிட்டப்பார்வை குறைபாடு கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கிட்டப்பார்வை குறைபாட்டைத் தடுக்க, சிறு குழந்தைகள் இயற்கை வெளிச்சத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும்.
திரைகளைப் பார்ப்பது, படிப்பது, சிறிய பொருள்களைக் கொண்டு கைவேலைகளைச் செய்வது போன்ற செயல்களில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
குழந்தைக்கு ஏற்கெனவே கிட்டப்பார்வை குறைபாடு இருந்து, அது வேகமாக வளர்ந்து வந்தால், உடனடியாகக் கண் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும் எனச் சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையத்தின் பேராசிரியர் டோனி ஹோங் கூறினார்.
கிட்டப்பார்வையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெரியவர்கள் கிளவ்கோமா மற்றும் பிற சாத்தியமான சிக்கல்களைச் சரிசெய்ய விரிவான கண் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.