சுற்றுப்புறத்துக்கு ஏற்புடைய வீட்டுச் சாதனங்களை கண்டறியும் வழிகள்

சுற்றுப்புறத்துக்கு ஏற்புடைய வீட்டுச் சாதனங்களை கண்டறியும் வழிகள்

2 mins read
eacff0c3-4d74-48d5-9602-e9d74019014c
வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பாளர்கள் தங்கள் சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்தி RedeemSG (go.gov.sg/cv-claim) இணையப்பக்கத்துக்குச் சென்று சுற்றுப்புறத்துக்கு ஏற்புடைய வீட்டுச் சாதனங்களை வாங்க வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்குத் தலா $300 பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

அவற்றைப் பயன்படுத்தி சுற்றுப்புறத்துக்கு ஏற்புடைய குறிப்பிட்ட சில வீட்டுச் சாதனங்களை வாங்கலாம்.

பருவநிலைக்கு ஏற்புடைய வீடுகள் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக இப்பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பாளர்கள் தங்கள் சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்தி RedeemSG (go.gov.sg/cv-claim) இணையப்பக்கத்துக்குச் சென்று பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி 14 சில்லறை வர்த்தகர்களிடமிருந்து வீட்டுச் சாதனங்களை வாங்கலாம்.

இவற்றில் கோர்ட்ஸ், பெஸ்ட் டென்கி, ஆடியோ ஹவுஸ், ஷெங் சியோங் போன்றவை அடங்கும்.

அடையாள அட்டை, மின்சாரக் கட்டண ஆவணங்கள் போன்றவற்றை வர்த்தகர்களிடம் காட்டி குடியிருப்பாளர்கள் தங்கள் முகவரியை அவர்களிடம் தெரிவித்து பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வீட்டுச் சாதனங்களை வாங்கலாம்.

இதற்கிடையே, சுற்றுப்புறத்துக்கு ஏற்புடைய வீட்டுச் சாதனங்களைக் கண்டறிவதற்கான வழிகளை ‘சிம்ப்ளி சைன்ஸ்’ எனும் வாரத்துக்கு இருமுறை வெளியிடப்படும் புதிய தொகுப்பு வெளியிட்டுள்ளது.

பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி குறைந்தது மூன்று புட்குறிகளைக் கொண்ட குளிர்பதனப் பெட்டிகள் அல்லது ஐந்து புட்குறிகளைக் கொண்ட குளிர்சாதனப் பெட்டிகளை வாங்கலாம்.

இந்தப் புட்குறிகள் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் எரிசக்தி வில்லையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கூடுதல் புட்குறிகள் இருந்தால் குறைவான எரிசக்தியைப் பயன்படுத்தும் சாதனம் என்று பொருள்படும்.

குறைந்தது மூன்று புட்குறிகளைக் கொண்ட குளியல் சாதனங்கள், தண்ணீர் குழாய்கள் போன்றவற்றை வாங்கலாம். பொதுப் பயனீட்டுக் கழகத்தின் நீர் சேமிப்புத் திட்டத்தின்கீழ் புட்குறிகள் இடப்பட்டுள்ளன.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை  https://www.climate-friendly-households.gov.sg/ எனும் இணையப்பக்கத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

புட்குறிகளைத் தவிர்த்து, சுற்றுப்புறத்துக்கு ஏற்படைய வீட்டுச் சாதனங்களைத் தேர்வு செய்ய வேறு வழிகளும் உள்ளன என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் எரிசக்திக் கல்விக் கழக ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த திரு ஆல்வின் இ தெரிவித்தார்.

உதாரணத்துக்கு, வழக்கமாகப் பயன்படுத்தும் நீர் சூடேற்றும் சாதனம், துணிகளை உலரவைக்கும் சாதனம் ஆகியவற்றைக் காட்டிலும் சூடேற்றும் விசைக்குழாயைப் பயன்படுத்தும் நீர் சூடேற்றும் சாதனம், துணிகளை உலரவைக்கும் சாதனம் குறைவான எரிசக்தியைப் பயன்படுத்தும் என்றார் அவர்.

ஒரே நேரத்தில் அதிக அளவிலான துணிகளை எப்போதாவது ஒருமுறை துவைக்கும் குடும்பங்களுக்குப் பெரிய சலவை இயந்திரங்கள், துணிகளை உலர வைக்க பெரிய இயந்திரங்கள் ஆகியவை தேவையில்லை என்று அவர் கூறினார்.

இந்தப் பெரிய இயந்திரங்கள் கூடுதல் தண்ணீர் மற்றும் எரிசக்தியைப் பயன்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்