தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிராணவாயு குறைபாட்டால் மூச்சுத்திணறி தொழில்நுட்பர் மாண்டார்: மரண விசாரணை அதிகாரி

1 mins read
1b66fe3c-8f5e-43f7-be58-581cc519ff47
ஜோகூர் பாருவைச் சேர்ந்த 44 வயது ஆடவர் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் உயிரிழந்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஆண்டு 44 வயது மலேசிய ஆடவர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில் மரண விசாரணை அதிகாரியின் விளக்கம் வெளியாகி உள்ளது.

ஹோ சீ மெங் எனப்படும் அவர் ஜோகூர் பாருவில் இருந்து சிங்கப்பூர் வந்து பணியாற்றினார். பராமரிப்புத் தொழில்நுட்பரான அவர், சிங்கப்பூரின் பன்றி இறைச்சி விநியோகிப்பாளரான பிரைமரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் வேலை செய்தார்.

2023 ஜூலை 18ஆம் தேதி கரியமில வாயு மூலம் உணர்விழக்கச் செய்யும் கருவி ஒன்று பழுதடைந்ததால் பராமரிப்புப் பணி மறுநாளும் தொடர்ந்தது. வேறு ஓர் இடத்தில் வேலை செய்து கொண்டு இருந்த ஹோ, அங்கு வரவழைக்கப்பட்டார்.

பன்றிகளைக் கொல்லும் முன்னர் அவற்றை உணர்விழக்கச் செய்யும் பாதாள எரிவாயு அறையினுள் பழுதுநீக்கக் கருவி ஒன்று விழுந்துவிட்டதால் அதனை எடுக்க பிற்பகல் 3.10 மணியளவில் என்95 முகக்கவசத்துடன் ஹோ நுழைந்தார்.

உள்ளே நுழைந்ததும் நடுங்கிய அவர், ஏணியில் ஏறி வெளிவர முயன்றபோது கீழே விழுந்தார். உணர்வற்றுக் கிடந்த அவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டு இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அதேநாளில் அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பாதாள எரிவாயு அறையினுள் சென்ற அவர் பிராணவாயு குறைபாட்டால் மூச்சுத்திணறி இறந்தது விசாரணை மூலம் கண்டறியப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி வோங் லி டெய்ன் தெரிவித்து உள்ளார்.

ஹோவின் மரணத்தில் சதிவேலை எதுவும் இல்லை என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்புச் சொற்கள்