பாலர் பள்ளியில் கூடுதல் மாணவர்கள்; சராசரி பள்ளிக் கட்டணம் குறைந்தது

பாலர் பள்ளியில் கூடுதல் மாணவர்கள்; சராசரி பள்ளிக் கட்டணம் குறைந்தது

2 mins read
c2d29615-5c22-49f2-b024-8028cf341874
2023ஆம் ஆண்டில் மூன்று வயதுக்கும் நான்கு வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களில் 90 விழுக்காட்டினர் பாலர் பள்ளியில் சேர்ந்து பயின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த பத்தாண்டுகளில் பாலர் பள்ளிகளில் சேர்ந்து பயிலும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன், முன்பைவிட குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்கள் கட்டுப்படியான விலையில் உள்ளன.

2023ஆம் ஆண்டில் மூன்று வயதுக்கும் நான்கு வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களில் 90 விழுக்காட்டினர் பாலர் பள்ளியில் சேர்ந்து பயின்றனர்.

2013ஆம் ஆண்டில் இந்த விகிதம் 75 விழுக்காடாக இருந்தது.

கட்டண வரம்பும் அரசாங்க மானியமும் பாலர் பள்ளிக் கட்டணங்களைக் கட்டுப்படியான விலையில் வைத்திருப்பதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஜூலை 15ஆம் தேதியன்று தெரிவித்தது.

வளர்ச்சி தொடர்பான தேவைகளைக் கொண்ட சிறுவர்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டிலிருந்து இருமடங்கிற்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளதாக அமைச்சு கூறியது.

சிங்கப்பூரில் பாலர் கல்வி, அதற்கான ஆதரவு ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து அமைச்சு மறுஆய்வு செய்துள்ளது.

குடும்பப் போக்குகள் தொடர்பாக அது முதல்முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பாலர் கல்வியை மேம்படுத்த பள்ளிக் கட்டண வரம்புகளை விதிக்கவும் கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள பாலர் பள்ளிகளின் ஆற்றலை அதிகரிக்கவும் அண்மைய ஆண்டுகளில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முழுநாள் கைக்குழந்தைப் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் மும்மடங்கு உயர்ந்துள்ளது.

அவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.

2013ஆம் ஆண்டில் 5,257 முழுநாள் கைக்குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் இருந்தன.

இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 14,580ஆக உயர்ந்தது.

முழுநாள் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் உள்ள இடங்கள் 2013ஆம் ஆண்டில் 96,340ஆக இருந்தது.

இது 2023ஆம் ஆண்டில் 194,972ஆக ஏற்றம் கண்டது.

கைக்குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் சிங்கப்பூரர்கள் செலுத்த வேண்டிய சராசரிக் கட்டணம் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் சிறிதளவு குறைந்தது.

2019ஆம் ஆண்டில் சிங்கப்பூரர்களுக்கான கட்டணம் $1,275ஆக இருந்தது.

இது 2023ஆம் ஆண்டில் $1,235ஆகக் குறைந்தது.

சிங்கப்பூரர்களுக்கான சராசரி குழந்தை பராமரிப்புச் சேவைக் கட்டணம் அதே காலகட்டத்தில் $800லிருந்து $720ஆகக் குறைந்தது.

2025ஆம் ஆண்டில் முழுநாள் குழந்தைப் பராமரிப்புச் சேவை வழங்கும் ஐந்து முதன்மை நிறுவனங்களில் மாதக் கட்டணம் $40 குறைந்தது $640ஆக இருக்கும். 28 பங்காளித்துவ நிலையங்களில் மாதக் கட்டணம் $680ஆகக் குறையும்.

தற்போது முதன்மை நிலையங்களில் கட்டண வரம்பு $680ஆகவும் பங்காளித்துவ நிலையங்களில் கட்டண வரம்பு $720ஆகவும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்